சென்னை: துணை ஆட்சியர், டிஎஸ்பி மற்றும் வனத்துறை உதவிப் பாதுகாவலர் பதவிகளுக்கான குரூப்-1 மற்றும் குரூப்-1ஏ முதற்கட்டத் தேர்வு இன்று நடைபெறும். இந்தத் தேர்வை சுமார் 2 லட்சத்து 49 ஆயிரம் பேர் எழுதுவார்கள். இது தொடர்பாக, தமிழ்நாடு பொதுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ள அறிவிப்பில், குரூப்-1 பதவிகளில் 70 காலியிடங்களையும், குரூப்-1ஏ (வனத்துறை உதவிப் பாதுகாவலர்)-இல் 2 காலியிடங்களையும் நிரப்ப இன்று குரூப்-1 மற்றும் குரூப்-1ஏ பொது முதற்கட்டத் தேர்வு நடைபெறும்.

மொத்தம் 2 லட்சத்து 49 ஆயிரத்து 296 பேர் தேர்வு எழுதுவார்கள். இதற்காக, மாநிலம் முழுவதும் 44 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 987 தலைமை ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 170 இடங்களில் 41,094 பேர் தேர்வு எழுதுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.