சென்னை கோட்டூர்புரத்தில் தமிழக அரசு சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சென்னை இதழியல் கல்வி நிறுவனம் தொடக்க விழா இன்று நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நிறுவனத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். மாணவர்களுடன் கலந்துரையாடிய அவர், இதழியல் துறையில் தரமான கல்வி பெற அனைவரும் முயற்சிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையின் 2025-26 மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டபடி, இதழியல் துறையில் பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் ஊடக கல்வி மேம்பாட்டை நோக்கமாக கொண்டு இந்த நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. ரூ.7.75 கோடி செலவில் அண்ணா நூற்றாண்டு நூலகம் அருகே நிறுவப்பட்டுள்ள இந்த கல்வி நிறுவனத்தில், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஓராண்டு முதுநிலை பட்டயப் படிப்பு குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும்.
பிரிண்ட், டெலிவிஷன், ரேடியோ, இணைய ஊடகங்களில் பணியாற்ற தேவையான திறமைகள் வளர்க்கும் வகையில் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், சர்வதேச கல்வி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த விழாவில் சன் நியூஸ் தலைமை ஆசிரியர் மு.குணசேகரன், ராம்நாத் கோயங்கா விருது பெற்றதைத் தொடர்ந்து, தனக்கு வழங்கப்பட்ட பரிசுத்தொகை ரூ.1 லட்சத்துடன் சேர்த்து, மொத்தம் ரூ.1,10,000 காசோலையை தனது ஆசான் இராம.திரு.சம்பந்தம் நினைவு அறநல்கை அமைக்க முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினார். இந்த நிதி ஆண்டுதோறும் விளிம்புநிலை மாணவர்களின் கல்விக்காக பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்காக கல்லூரியின் தலைவரும் தி ஹிந்து நாளேட்டின் முன்னாள் ஆசிரியருமான என்.ரவி நன்றியைத் தெரிவித்தார். விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மு.பெ.சாமிநாதன், அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.