சென்னை: அரசு செய்திக்குறிப்பில், “மின்னணு கூறுகளை உற்பத்தி செய்வதற்கான தமிழ்நாடு மின்னணு கூறு உற்பத்தி சிறப்புத் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். மின்னணுத் துறையில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில், அகில இந்திய அளவில் தமிழ்நாடு ஏற்கனவே முன்னணி மாநிலமாக உள்ளது. மின்னணுத் துறையில் மதிப்பு கூட்டப்பட்ட உற்பத்தியை ஊக்குவிக்கவும், குறைக்கடத்தி துணைத் துறைகளில் பெரிய முதலீடுகளை ஈர்க்கவும், தமிழ்நாடு அரசு தமிழ்நாடு குறைக்கடத்தி மற்றும் மேம்பட்ட மின்னணுக் கொள்கை 2024 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தக் கொள்கை தமிழ்நாடு மின்னணுப் பொருட்களின் உற்பத்தியில் முன்னணி மாநிலமாக மாற வழிவகுத்திருந்தாலும், மின்னணு உற்பத்தி சுற்றுச்சூழல் அமைப்பை மேலும் மேம்படுத்துவதற்காக மின்னணு கூறு உற்பத்தி சிறப்புத் திட்டத்தை முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்தார்.

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) மின்னணு கூறு உற்பத்தித் திட்டத்தின் மூலம் மாநிலம் பயனடைவதற்காக மின்னணு கூறு உற்பத்தி சிறப்புத் திட்டத்தை அறிவித்துள்ளது. “முதலீட்டை ஈர்ப்பதற்காக, மத்திய அரசு திட்டத்தில் அறிவிக்கப்பட்ட மானியத்திற்கு ஏற்ப தமிழக அரசு சலுகைகளை வழங்கும். இது தமிழ்நாட்டில் ரூ.30,000 கோடி மதிப்புள்ள முதலீடுகளை ஈர்க்கும் மற்றும் 60,000 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.