சென்னை: தேசிய அளவில் 10வது இடம் பிடித்த சென்னை மருத்துவக் கல்லூரி டீன் தேரணிராஜன் சான்றிதழை சுகாதாரத்துறை அமைச்சர் எம்.சுப்பிரமணியனிடம் காண்பித்தார் அப்பொழுது அமைச்சர் வாழ்த்து தெரிவித்தார்.
இந்தியாவில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மொத்த எண்ணிக்கை 706. இதில் 182 அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மத்திய கல்வி அமைச்சகத்தின் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பில் (NIRF) பங்கேற்றன. மொத்தம் 182 அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் இந்தியாவிற்காக நான்கு பிராந்தியங்களாகப் பிரிக்கப்பட்டு, தெற்குப் பகுதியில் 76 மருத்துவக் கல்லூரிகளும், வடக்குப் பகுதியில் 43 மருத்துவக் கல்லூரிகளும், கிழக்குப் பகுதியில் 14 மருத்துவக் கல்லூரிகளும், மேற்குப் பிராந்தியத்தில் 49 மருத்துவக் கல்லூரிகளும் விண்ணப்பித்துள்ளன.
2024ஆம் ஆண்டு இளங்கலை மற்றும் முதுநிலை மருத்துவக் கல்லூரிகளின் பட்டியலில் சென்னை மருத்துவக் கல்லூரி (எம்எம்சி) 10வது இடத்தையும், மாநில அரசுகளால் நடத்தப்படும் இளங்கலை மற்றும் முதுநிலை மருத்துவக் கல்லூரிகளில் இந்தியாவிலேயே முதல் இடத்தையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2019ல் 16வது இடத்திலும், 2021ல் 14வது இடத்திலும், 2022ல் 12வது இடத்திலும், 2023ல் 11வது இடத்திலும் இருந்தது. இந்த ஆண்டுக்கான மத்திய அரசின் தரவரிசைப் பட்டியலில் சென்னை மருத்துவக் கல்லூரி 10வது இடத்தைப் பிடித்துள்ளது.
சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் தேரனிராஜன் நேற்று சுகாதாரத் துறை அமைச்சர் எம்.சுப்பிரமணியனிடம் சான்றிதழைக் காட்டி வாழ்த்து பெற்றுக்கொண்டார். சென்னை மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் கவிதா, நோடல் அலுவலர் அன்புச்செல்வி ஆகியோர் உடனிருந்தனர் என தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.