சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிய இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில், நேற்று முன்தினம் வங்கக் கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வலுவிழந்து மத்திய மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக நேற்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்தது.
இதுதவிர தஞ்சாவூர், கோவை, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்துள்ளது. இதேபோல், சென்னை, நீலகிரி, கடலூர், மதுரை, நாகப்பட்டினம், திருநெல்வேலி, சேலம், திருவள்ளூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. அதிகாலையில் ஒரு சில இடங்களில் பனிமூட்டம் காணப்பட்டது.
இந்நிலையில், மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு – தென்மேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்கக்கடலை ஒட்டி வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை நோக்கி நாளை நகரும். இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். நாளை வட தமிழக கடலோரப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும்.
மேலும், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 25-ம் தேதியும் இதே நிலை தொடரும். 26-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னையில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகாலையில் ஒரு சில இடங்களில் லேசான மூடுபனி காணப்படும்.
அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி வரை இருக்கும். மேலும், இன்றும் நாளையும் வட தமிழக கடலோர பகுதிகளில் மணிக்கு 55 கி.மீ வேகத்தில் சூறாவளி புயல் வீசும். வரும் 25-ம் தேதி தமிழக கடலோர பகுதிகளில் மணிக்கு 55 கி.மீ வேகத்தில் சூறாவளி புயல் வீசும். எனவே மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.