சென்னை: புத்தாண்டு தினமான இன்று சென்னையின் பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இன்று கேளிக்கை விடுதிகள் மற்றும் உணவகங்களில் மக்கள் அதிக அளவில் குவிந்துள்ளதால், சாலைகளில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஆங்கில புத்தாண்டையொட்டி, சென்னை மெரினா கடற்கரை, எலியட் கடற்கரை உள்ளிட்ட பொழுதுபோக்கு மையங்களில் ஏராளமானோர் குவிந்து புத்தாண்டைக் கொண்டாடினர். இதன் காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
டிசம்பர் 31ம் தேதி இரவு 10 மணி முதல் ஜனவரி 1ம் தேதி காலை 6 மணி வரை மேம்பாலங்கள் மூடப்பட்டன.இதையடுத்து இன்று காலை முதல் போக்குவரத்து வழக்கம் போல் இயங்குகிறது. புத்தாண்டு தினமான இன்று விடுமுறை என்பதால் ஏராளமானோர் குடும்பத்துடன் கோவில்கள், பூங்காக்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு இடங்களுக்கு சென்று வருகின்றனர்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை, மகாபலிபுரத்தில் உள்ள பொழுதுபோக்கு இடங்களுக்கு ஏராளமானோர் சென்றனர். இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதேபோல் சென்னை வேளச்சேரியில் புத்தாண்டையொட்டி ஏராளமானோர் உணவகங்களில் குவிந்தனர்.
பள்ளிக்கரணை – வேளச்சேரி இடையே, ஏராளமானோர், உணவகங்கள் அருகே, ரோட்டில் கார்களை நிறுத்தியதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
புத்தாண்டை கொண்டாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், சென்னையில் இந்த வகை போக்குவரத்து நெரிசலும் அதிகரித்துள்ளது.