சென்னை: ஆன்லைன் ரம்மி விளையாட்டை ஒழுங்குபடுத்தும் தமிழக அரசின் விதிகளுக்கு எதிரான வழக்குகளின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. ஆன்லைன் ரம்மியால் பலர் பணத்தை இழந்து தற்கொலைக்கு தள்ளப்பட்டனர். இந்நிலையில், ஆன்லைன் ரம்மியை முறைப்படுத்த தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதில், ஆன்லைன் கேம்களுக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஆன்லைன் ரம்மி தொடர்பான விதிகளை அரசே உருவாக்கலாம் என தீர்ப்பளித்தது. அதன்படி, ஆன்லைன் கேம்களை கட்டுப்படுத்த தமிழக அரசு விதிகளை விதித்துள்ளது.

இந்நிலையில், ஆன்லைன் கேம் விளையாட ஆதார் கட்டாயம் மற்றும் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை விளையாட தடை விதித்த தமிழக அரசின் விதிகளை எதிர்த்து Play Games 24*7, Head Digital Works, Esport Players உள்ளிட்டோர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் எஸ்.எம் சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது எழுத்துப்பூர்வ வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து, வழக்குகள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.