சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக துணைக் காவல் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். அதேபோல், காவல் ஆய்வாளர்களாகப் பணியாற்றியவர்கள் துணைக் காவல் கண்காணிப்பாளர்களாகப் பதவி உயர்வு பெறுகின்றனர். இந்நிலையில், நேரடி துணைக் கண்காணிப்பாளர்களை கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களாக நியமிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, நீதிபதி சி.வி., கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மூத்த வழக்கறிஞர்கள் ஜி.சங்கரன், ஏ.ஆர்.எல். சுந்தரேசன், வக்கீல் முகமது முசாமில் ஆகியோர் ஆஜராகி வாதிடுகையில், ”கூடுதல் எஸ்.பி.,க்களுக்கு பணி மூப்பு பட்டியல் தயாரித்து தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும். ஆனால், பணி மூப்பு பட்டியல் தயாரிக்காமல் தற்காலிகமாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், அங்கீகரிக்கப்பட்ட 197 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகளில் பெரும்பான்மையானவர்கள் தற்காலிக பதவி உயர்வு மூலம் துணை போலீஸ் சூப்பிரண்டுகளாக நியமிக்கப்படுகிறார்கள். அதேசமயம், 4 நேரடி துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மட்டுமே கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகளாக உள்ளனர்’’ என வாதிட்டனர். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, துணைக் காவல் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு பதவி உயர்வு மூலம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு வழங்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.