சென்னை மாநகராட்சியின் 5, 6ஆம் மண்டலங்களில் தூய்மை பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கும் தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் தலையிட மறுத்துள்ளது. தூய்மைப் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்ற அச்சம் தேவையற்றது என்றும் நீதிபதி குறிப்பிட்டார். மாநகராட்சி மேற்கொண்டுள்ள நடவடிக்கை பணியாளர்களின் வேலை வாய்ப்புகளை பறிக்காத வகையில் இருக்கும் என்று விளக்கப்பட்டது.

வழக்கை விசாரித்தபோது, மனுதாரர் தரப்பில் தனியார்மயத்தை எதிர்த்து வாதிடப்பட்டது. 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களின் நிலைமை கவலைக்குரியது என்றும், அவர்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் சூழல் உருவாகக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது. இதற்கு மாநகராட்சி தரப்பில், பணியாளர்களை நீக்குவதில்லை, ஒப்பந்த அடிப்படையில் மேலும் சிறந்த நலன்களுடன் வேலை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
மாநகராட்சி தரப்பில், மொத்தம் 15 மண்டலங்களில் 11 மண்டலங்கள் ஏற்கனவே தனியார்மயமாக்கப்பட்டுள்ளன என்றும், தற்போது 2000 பணியாளர்களுக்கு அதிக ஊதியமும், காப்பீடு மற்றும் வருங்கால வைப்பு நிதி போன்ற சலுகைகளும் வழங்கப்படும் என வலியுறுத்தப்பட்டது. ஒப்பந்த நிறுவனத்தின் தரப்பிலும், 1900 பணியாளர்கள் தேவைப்படுவதாகவும், ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை பணியாளர்கள் சேர்க்கப்படும் என்றும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
அனைத்து தரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிபதி, மாநகராட்சி தீர்மானத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றார். ஆனால் பணியாளர்கள் கடைசியாக பெற்ற ஊதியத்தையே தொடர்ந்து வழங்க வேண்டும் என்றும், மாநகராட்சி தனியார் நிறுவனத்துடன் இணைந்து அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இதனால் தூய்மைப் பணியாளர்களின் வேலை பாதுகாப்பு உறுதியாகும் நிலைமை உருவாகியுள்ளது.