சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கொலைமிரட்டல் வழக்கில் குற்றப்பத்திரிகையை விரைந்து தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, 2015-ல் பதிவு செய்யப்பட்ட வழக்கு, அதே ஆண்டு முடித்து வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் நேற்று நேரில் ஆஜராகுமாறு தமிழக உள்துறை செயலாளருக்கு நீதிபதி பி.வேல்முருகன் உத்தரவிட்டார். அதன்படி நேற்று காலை இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, உள்துறை செயலருக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதி, மாலை 4.30 மணிக்குள் நேரில் ஆஜராகாவிட்டால் உள்துறை செயலாளர் மீது வாரண்ட் பிறப்பிக்கப்படும் என எச்சரித்தார். இந்நிலையில், தமிழக அரசின் உள்துறை செயலர் தீரஜ்குமார் நேற்று மாலை நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அப்போது, அவர் சார்பில் கூடுதல் தலைமை அரசு வக்கீல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, உரிய காலத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது குறித்து போலீசாருக்கு உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றார்.
அதைத் தொடர்ந்து, நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளில் குற்றப்பத்திரிகையை விரைந்து தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்க உள்துறை செயலாளருக்கு உத்தரவிட்ட நீதிபதி, அனைவரும் நீதிமன்றத்திற்கு வந்து தீர்வு காண முடியாது என்பதால், அதில் தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கிரிமினல் வழக்குகள் விரைவாக ஏழை எளிய மக்களுக்கு உதவும்.
மேலும், உள்துறை செயலாளரிடம் உங்களை நேரில் அழைப்பது நீதிமன்றத்தின் நோக்கமல்ல. காவல்துறையில் நடைபெறும் சட்ட விரோத செயல்கள் குறித்து உங்களுக்குத் தெரிவிக்க ஆஜராகுமாறு உத்தரவிட்டேன். காவல்துறையில் மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் இதுபோன்ற நடவடிக்கைகள் இருப்பதாக கூறி வழக்கை முடித்து வைத்தார்.