சென்னை: திமுக ஆட்சியில் தமிழகம் கொலைக்களமாக மாறிவிட்டதாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: திருச்சி ஸ்ரீரங்கத்தில் காவிரி ஆற்றை ரசித்து கொண்டிருந்த விராலிமலையைச் சேர்ந்த ரஞ்சித் கண்ணன் என்ற மாணவர் போதை கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது.
இந்த திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவுக்குச் சீர்குலைந்துள்ளது என்பதற்கு ஆடிப்பெருக்கின் காவிரிக் கரையில் நடந்த கொலையே சாட்சி. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், திருச்சி, கரூர், கோவை, சிவகங்கை, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் கொலைச் சம்பவங்கள் நடந்திருப்பது மிகுந்த அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கிறது.
திமுக ஆட்சியில் தமிழகம் கொலைக்களமாக மாறிவிட்டது என்று சொன்னால் அது மிகையாகாது. வாரந்தோறும் ஜாதக பலன்களைப் போடுவது போல் நாளிதழ்கள் கொலைப் பட்டியலை வெளியிடும் அளவுக்கு சட்டம் ஒழுங்கை முற்றிலும் சீர்குலைத்துள்ள திமுக அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தினசரி கொலைகளால் மக்கள் எப்படி பாதுகாப்பாக உணர முடியும்? பயமில்லாமல் எப்படி தினமும் வேலைக்குச் செல்வது? நம் மாநிலத்திற்கு சுற்றுலா பயணிகள் எப்படி வருவார்கள்? புதிய தொழில் முதலீடுகள் எப்படி வரும்?
தமிழ்நாட்டின் வளர்ச்சி உங்களுக்காக நீங்கள் செய்யும் செய்தித்தாள் அல்லது தொலைக்காட்சி விளம்பரங்களால் வராது. சீரான சட்டம் ஒழுங்குதான் அதற்கு அடிப்படை என்பதை உணர வேண்டும். அதிமுகவின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதை தவிர்த்து சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் திமுக முதல்வர் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார். என்று விமர்சித்தார்.