சென்னை: நீங்கள் மகிழ்ச்சியாக, சந்தோஷமாக இருப்பதை எப்படி தெரிந்து கொள்ளலாம். பேனாவை எடுத்துக்கொள்ளுங்கள். இன்று உங்களை சந்தோஷம் கொள்ள வைத்த பத்து சம்பவங்களை நினைவுபடுத்தி எழுதுங்கள்.
சரியான நேரத்தில் விழித்தது, மனைவியிடம் (கணவரிடம்) இருந்து முத்தம் பெற்றது, தேவையான அளவு உடற்பயிற்சி செய்தது, நண்பர்களின் அரட்டை, வாட்ஸ் -அப் மற்றும் பேஸ்புக்கில் பார்த்தது, படித்தது.. இப்படி எதுவானாலும் இருக்கலாம். உங்களுக்கு எவை சந்தோஷம் தந்திருந்தாலும், அவைகளில் பத்து விஷயங்களை எழுதுங்கள்.
எழுதிவிட்டீர்களா? சரி.. எவ்வளவு நேரத்தில் அந்த பத்து விஷயங்களை எழுதினீர்கள்? அந்த கால அளவையும் குறித்துக்கொள்ளுங்கள். பேப்பரையும், பேனாவையும் ஐந்து நிமிடங்கள் அப்படியே தள்ளிவைத்துவிட்டு, அடுத்த கேள்விக்கு விடை எழுத நீங்கள் தயாராகுங்கள்.
இன்று, மேலே எழுதிய அதே நேரத்திற்குள் நீங்கள் சந்தித்த பத்து எரிச்சல், வருத்தத்திற்குரிய விஷயங்களை எழுதுங்கள். வாஷ்பேஷினை திறந்தபோது தண்ணீர் வராததோ, செல்போனில் தேவையற்ற அழைப்பு வந்ததோ, இட்லிக்கு சட்னி ருசியில்லை என்று கோபப்பட்டதோ, குழந்தைகளை திட்டியதோ.. எதுவாகவும் இருக்கலாம். அவைகளில் பத்து எதிர்மறையான விஷயங்களை எழுதுங்கள்.
இப்போது விஷயத்திற்கு வருவோம். இரண்டு கேள்விகளில், எந்த கேள்விக்கு குறைந்த நேரத்தில் நீங்கள் விடை எழுதினீர்கள்? முதல் கேள்விக்கு நீங்கள் வேகமாக பதில் எழுதியிருந்தால் நீங்களே உங்களுக்கு ஒரு சபாஷ் போட்டுக்கொள்ளுங்கள். ஏனென்றால் நீங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் அல்லது அந்த வாழ்க்கை வாழ விரும்புகிறவர்கள் என்ற வரிசையில் நிற்கிறீர்கள். அதாவது உங்கள் மனதில் மகிழ்ச்சியான விஷயங்களே பதிந்துபோய் இருக்கின்றன.
இரண்டாவது கேள்விக்கு நீங்கள் விறுவிறுவென்று விரைவாக பதில் எழுதியிருந்தால், உங்கள் மனது முழுக்க காயங்களும், கசப்புகளும்தான் நிறைந்து கிடக்கின்றன. உங்களின் மகிழ்ச்சிக்கு அவை மாபெரும் தடையாக இருந்துகொண்டிருக்கின்றன என்பதை நீங்கள் உணரவேண்டும்.
மனம் ஒரு அழகான பாத்திரம். கோபதாபம், எரிச்சல், கவலைகளால் அந்த பாத்திரம் எப்போதும் நிரப்பப்பட்டிருந்தால், மகிழ்ச்சியை அங்கே வைக்க இடமிருக்காது. சோகங்கள், துக்கங்கள், எதிர்மறையான எண்ணங்கள் வெளியேற்றப்பட்டு, மனப்பாத்திரம் காலியாக இருந்தால்தான் மகிழ்ச்சியை நிரப்ப முடியும்.