சென்னை: அதிமுகவை ஆர்எஸ்எஸ் வழிநடத்துகிறது என்ற விமர்சனங்கள் தொடர்ச்சியாக எழுந்து வரும் நிலையில், மத்திய இணையமைச்சர் எல். முருகன் “அதிமுக ஆர்எஸ்எஸ் வழிநடத்தினால் என்ன தவறு” எனக் கேள்வி எழுப்பியிருந்தார். இதனைத் தொடர்ந்து விசிக தலைவர் திருமாவளவன் பதிலளித்துள்ளார்.

அவர் கூறியதாவது, அதிமுக பெரியார் பாசறையில் தோன்றிய அரசியல் இயக்கம். எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்கள் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக வளர்ச்சி பெறுவதற்கு இடமளிக்கவில்லை. ஆனால், இன்றைய அதிமுக தலைவர்கள் சங் பரிவார் அமைப்புகளுக்கு வாய்ப்பளிப்பது அதிர்ச்சியளிக்கிறது. அதிமுக இந்த நிலையில் தான் “ஆர்எஸ்எஸ் வழிநடத்தினால் என்ன தவறு” எனக் கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது.
இதே போன்று விஜய்க்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது என்றால், அவரது பேச்சு மற்றும் செயல்பாடுகளில் அந்த சாயல் இருப்பதாக சிலர் கருதுகின்றனர். எனவே, விஜய் எச்சரிக்கையாக இருப்பார் என நான் நம்புகிறேன் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, ஆர்எஸ்எஸ் தமிழ்நாட்டில் வேரூன்றுவதற்கு இடம் கொடுப்பது தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகமாகும். ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் இதனை எதிர்க்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
முன்னதாக எல். முருகன், ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு காணும் சமூக இயக்கம் என்றும், நேரு, அம்பேத்கர் போன்றோர் அதை பாராட்டியதாகவும் கூறினார். சென்னையில் வெள்ளம் ஏற்பட்டபோது முதல் உதவி செய்தவர்களாக ஆர்எஸ்எஸ் அமைப்பினர் இருந்தனர் என்றும் குறிப்பிட்டார். மேலும், அதிமுக ஆர்எஸ்எஸ் கருத்துகளை கேட்பது வரவேற்கத்தக்கது, விஜய்யும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதனால், விஜய் அரசியலில் எப்படிப் பாதையைத் தேர்ந்தெடுப்பார் என்பது குறித்து தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் ஆர்வமும் விவாதமும் எழுந்துள்ளது.