காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார். திமுக ஆட்சி கொடுங்கோல் ஆட்சி என்றும், அந்த ஆட்சி அகற்றப்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். திமுக அரசு குழப்பத்தை ஏற்படுத்தி பாமகவை பலவீனப்படுத்த முயல்கிறது என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தார். “நான் அமைதியாக இருப்பது பலவீனமல்ல, அது என்னுடைய பலம்” எனத் தெரிவித்தார்.

திமுகவால் வன்னியர் சமூகத்திற்கே துரோகம் நடைபெற்றதாகவும், அவர்கள் ஒதுக்கீட்டு உரிமைகளை மையமாகக் கொண்டு நம்ப வைத்து பின்னர் ஏமாற்றியதாகவும் அவர் கூறினார். மகாபலிபுரத்தில் வன்னியர் சங்க மாநாட்டில், திமுகவுக்கு ஒரு வன்னியரும் வாக்களிக்கக்கூடாது எனவே பேசினதாகவும் நினைவுகூர்ந்தார். திமுக, பாமக மீது தாக்குதல் நடத்தும் வகையில் கூட்டணி அரசியலை வெறும் எண்ணங்கள் மட்டுமல்ல, திட்டமிட்ட சூழ்ச்சியாக செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், பாமகவில் சிலர் திமுகவின் சூழ்ச்சிக்கு துணை போவதாகக் கூறிய அன்புமணி, அவர்கள் விரைவில் வெளிச்சத்திற்கு வருவார்கள் என அறிவித்தார். “நான் என் கட்சிக்கும், என் சமுதாயத்திற்கும் துரோகம் செய்தால், அதுதான் என் வாழ்நாளின் கடைசி நாள்” என்று உறுதியுடன் கூறினார். திமுகவின் யதார்த்த நிலையை மக்கள் உணர்ந்து கொண்டு இருப்பதால், அந்த முயற்சிகள் பலனளிக்காது என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை தொடர்கிறது எனவும், ஒரு பெண் சாலையில் நடக்க முடியாத அளவுக்கு திருட்டும், அச்சமும் அதிகரித்துவிட்டதாகவும் அவர் விமர்சித்தார். பரந்தூரில் பசுமை விமான நிலையம் கட்டப்பட வேண்டும் என்ற ஆட்சியின் பிடிவாதம் குறித்து பேசும் போது, அது மக்களின் விருப்பத்திற்கு மாறானது எனவும் கூறினார். பாமக வன்னியர் சமூகத்தின் உரிமைகளை உறுதி செய்யும் வரையில் தமது போராட்டம் தொடரும் என்றும் அவர் உறுதி அளித்தார்.