சென்னை: தென் மாவட்டத்தில் இருந்து வரும் அரசு பஸ்களை தாம்பரம் வரை இயக்கினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது. இதுகுறித்து துறை சார்பில் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னை மார்க்கமாக இயக்கப்படும் பேருந்துகள் கிளாம்பாக்கம், தாம்பரம், மாதவரம் பேருந்து நிலையம் வரை இயக்கப்படுகின்றன.
தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், மாதவரம் செல்லும் பஸ்கள் தவிர மற்ற பஸ்கள் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அனைத்து பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் முறையாக பின்பற்ற வேண்டும். தாம்பரம் பஸ் நிலையம் வரை பஸ்கள் இயக்கப்படுவதாக புகார் வந்தால் சம்பந்தப்பட்ட டிரைவர், கண்டக்டர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.