சென்னை: ரயில் போக்குவரத்து இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து ஆகும். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான ரயில்களில் கோடிக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். பஸ் கட்டணத்தை விட மிகக் குறைந்த கட்டணத்தில் அனைத்து வசதிகளுடன் ரயில்கள் இயக்கப்படுவதால், பொதுமக்கள் ரயில் பயணத்தை அதிகம் விரும்புகின்றனர்.
படுக்கை வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன. மேலும், தொலைதூர ரயில்களில் உணவகம் செயல்படுகிறது. இந்நிலையில், ரயில்களில் செல்லும் பயணிகள், மூட்டை, பெட்டிகளில் சாமான்களை கொண்டு வருகின்றனர். இதனால் ரயில்களில் பயணிக்கும் மற்ற பயணிகள் பாதிக்கப்படுவது மட்டுமின்றி ரயில்களை இயக்குவதில் சிரமமும் ஏற்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு ரயில்களில் லக்கேஜ் எடுத்துச் செல்ல தெற்கு ரயில்வே கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அந்த வகையில், ரயில் பயணிகளின் கூடுதல் லக்கேஜ்களுக்கு கட்டணம் வசூலிக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக எடை கொண்ட லக்கேஜ்களை எடுத்துச் செல்வோருக்கு விதிக்கப்படும் கட்டணம் குறித்து வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, ஏசி முதல் வகுப்பு பயணிகள் 70 கிலோ வரையிலும், ஏசி இரண்டாம் வகுப்பு பயணிகள் 50 கிலோ வரையிலும், ஏசி மூன்றாம் வகுப்பு பயணிகள் 40 கிலோ வரையிலும், முன்பதிவு செய்யப்பட்ட ஸ்லீப்பர் பெட்டிகளில் பயணிப்பவர்கள் 40 கிலோ வரையிலும், இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் பயணிப்பவர்கள் 35 கிலோ வரையிலும் லக்கேஜ்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறது.
நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக லக்கேஜ்களை ஏற்றிச் செல்லும் பயணிகளிடம், 10 முதல் 15 கிலோ வரை கூடுதல் லக்கேஜ் ஏற்றும் ஒவ்வொரு லக்கேஜுக்கும் 1.5 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை டிக்கெட் பரிசோதகர்கள் கண்காணிப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.