சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணிக்குள் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதனுடன் தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கமாக தமிழகத்தில் பல இடங்களில் மழை பதிவாகி வருகிறது.

சென்னையில் ஏற்கனவே எழும்பூர், கிண்டி, ஆலந்தூர், ஈக்காட்டுதாங்கல், புரசைவாக்கம், மாம்பலம், சைதாப்பேட்டை, வடபழனி, தேனாம்பேட்டை, அண்ணாசாலை, அடையாறு, நுங்கம்பாக்கம், பெசன்ட் நகர் போன்ற பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
மேலும் வரும் 18ஆம் தேதி வடமேற்கு மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், அதன் விளைவாக நீலகிரி மற்றும் கோவை மலைப்பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும், சில இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில், இரவு நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மீனவர்கள் வட மற்றும் தென்கடலோர பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை சின்னக்கல்லாரில் 16 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் மற்றும் விவசாயிகள் மழை காரணமாக எச்சரிக்கையுடன் இருக்குமாறு வானிலை மையம் கேட்டுக்கொண்டுள்ளது.