ஹைதராபாத்; மயங்கி விழுந்த மாணவிகள்… ஆந்திராவில் 200 முறை தோப்புக்கரணம் போடுமாறு மாணவிகளை பள்ளி முதல்வர் பாடாய்படுத்த, அவர்களில் 50 பேர் மயங்கி, சரிந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பள்ளிகளில் மாணவர்கள் ஒழுங்காக படிக்கவில்லை என்றால் ஆசிரியர்கள் தண்டனை வழங்குவது வழக்கம். அவரவர் நோக்கங்களுக்கு ஏற்ப தண்டனைகளின் வடிவம் உருவம் பெறும். இந்நிலையில், ஆந்திர மாநிலம் அல்லுரி சீதாராம ராஜு மாவட்டத்தில் பள்ளியில் வழங்கப்பட்ட நூதன தண்டனை சர்ச்சையாகி இருக்கிறது.
அங்குள்ள அரசு பள்ளி ஒன்றில் மாணவிகள் ஒழுங்காக படிப்பதில்லை, உத்தரவுக்கு கீழ்படிய மறுக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, பள்ளி முதல்வர் மாணவிகளை அழைத்து அவர்களுக்கு தண்டனை வழங்கி உள்ளார். அனைவரையும் 3 நாட்கள் தொடர்ந்து 200 முறை தோப்புக்கரணம் போட வேண்டும் என்பதே அது.
தோப்புக்கரணம் போட, போட மாணவிகள் ஒவ்வொருவரின் உடல்நிலையும் மோசம் அடைந்தது. சிலர் கால்கள் வீங்கியபடி கதற அப்போதும் தண்டனையை நிறுத்த முதல்வர் உத்தரவிடவில்லை என்று தெரிகிறது. தொடர்ந்து மாணவிகள் தோப்புக்கரணம் போட்டதால் கிட்டத்தட்ட 50 மாணவிகள் அங்கேயே மயங்கி, சரிந்து விழுந்திருக்கின்றனர்.