பாலக்காடு: கேரள-தமிழ்நாடு எல்லையில் உள்ள வாளையார் அருகே உள்ள ஆற்றுப்பதி கிராமத்தில் பழங்குடியினர் உட்பட ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். நேற்று காலை அந்தப் பகுதிக்குள் நுழைந்த சுருளிகொம்பன் என்ற காட்டு யானை சுற்றித் திரிந்து மக்களை அச்சுறுத்தி வந்தது. இது குறித்து வாளையார் வனத்துறை மற்றும் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர்.
அங்கு விரைந்த வனத்துறையினர் மற்றும் காவலர்கள் நீண்ட நேரம் மேளம் அடித்தும், பட்டாசு வெடித்தும் காட்டு யானையை எதிர்த்துப் போராடினர். அது அங்கிருந்து நகர்ந்து அருகிலுள்ள தோட்டப் பயிர்களை நாசமாக்கியது. இதைக் கண்ட தோட்டத் தொழிலாளர்கள் தங்கள் வேலையை பாதியிலேயே விட்டுவிட்டு அலறி அடித்து ஓடினர்.

அப்போது, வனத்துறையினர், காவலர்கள் மற்றும் பொதுமக்கள் காட்டு யானையை விரட்ட முயன்றபோது, திடீரென ஆக்ரோஷமாக மாறிய யானை, பொதுமக்களை நோக்கி ஓடியதாகத் தெரிகிறது. இதனால் பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டதால், அவர்கள் ஓடிவந்து வீடுகளுக்குள் தஞ்சம் புகுந்தனர்.
ஆனால், வனத்துறை அதிகாரிகள் மீண்டும் குரல் எழுப்பி யானையை விரட்டினர். வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து, ஆற்றின் அருகே உள்ள கிராமங்களுக்குள் வனவிலங்கு வருவதைத் தடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.