நெல்லை: நெல்லை நகர பகுதிகளில் இன்று காலை முதல் மிதமான சாரல் மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்ட அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலையில் மழையின் அளவு குறைந்துள்ளது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் தற்போது 91 அடி தண்ணீர் உள்ளது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் 82 அடி தண்ணீர் உள்ளது.
இங்கிருந்து 2,500 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நெல்லை மாநகர் பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் தற்போது 70 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மாஞ்சோலை எஸ்டேட் பகுதியில் இரவு முழுவதும் பெய்த மழை இன்று காலை முதல் சாரல் மழையாக மாறியுள்ளது. தேசிய பேரிடர் மீட்பு படையினர் முக்கூடலில் முகாமிட்டு அங்கு மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கனமழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள கூடுதாழை, உவரி, இடிந்தகரை, கூத்தங்குழி, பெருமணல் உள்ளிட்ட 10 மீனவ கிராமங்களை சேர்ந்த சுமார் 8000 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதன் காரணமாக 1500-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் கரையோரங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.