திருவள்ளூர்: ஆந்திர மாநிலம் நகரி அருகே உற்பத்தியாகும் ஆரணி ஆற்றின் குறுக்கே ஆந்திர பிரதேசத்தில் பிச்சாட்டூர் அணை அமைந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் இருந்து 16 கி.மீ தொலைவில் உள்ள இந்த அணைக்கு நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. எனவே அணையின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆந்திர மாநில நீர்வளத்துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் பிச்சாத்தூர் அணையில் இருந்து உபரி நீரை திறந்து விடுகின்றனர்.
முதற்கட்டமாக வினாடிக்கு 500 கனஅடி உபரி நீர் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் பிச்சாட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று காலை 6 மணி நிலவரப்படி இதன் அளவு வினாடிக்கு 3,500 கன அடியாக உள்ளது. இதன் மூலம் 1.85 டிஎம்சி கொள்ளளவு கொண்ட பிச்சாத்தூர் அணையின் நீர் இருப்பு 1.54 டிஎம்சியாக உள்ளது.
எனவே, இந்த அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவை வினாடிக்கு 2,000 கன அடியாக ஆந்திர மாநில நீர்வளத்துறை அதிகாரிகள் உயர்த்தியுள்ளனர். இந்த உபரி நீரும், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏரி, குளங்களில் இருந்து வெளியேறும் உபரி நீரும் சுருட்டப்பள்ளி, ஏ.என்., குப்பம், லட்சுமிபுரம் அணைக்கட்டுகள், ஏ.ரெட்டிபாளையம் மற்றும் ஆண்டர்மடம் தடுப்பு அணைகள் வழியாக வினாடிக்கு 3,449 கன அடி வீதம் பழவேற்காடு ஏரியில் கலக்கிறது.
இதனால் பேரண்டூர், பேரிடிவாக்கம், காரணி, புதுவயல், ஏலியம்பேடு, லட்சுமிபுரம், காட்டூர், ஆண்டார்மடம் உள்ளிட்ட ஆரணி கரையோர கிராமங்களுக்கு ஏற்கனவே வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஆரணி ஆற்றின் கரையோரங்களில் நீர்வளத்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.