தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 23 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளதால், அருவிகள் மற்றும் நீர்நிலைகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகாவில் உள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று காலை அளவீட்டின் போது நீர்வரத்து 5,500 கன அடியாக இருந்தது.
இந்நிலையில் இன்று காலை 6 மணி அளவீட்டின் போது நீர்வரத்து 14 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதையடுத்து, காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 21 ஆயிரம் கன அடியாகவும், 9 மணி நிலவரப்படி 23 ஆயிரம் கன அடியாகவும் நீர்வரத்து அதிகரித்தது.
ஒகேனக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகள் மற்றும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் படகு சவாரி செய்யவும், ஆறு மற்றும் அருவிகளில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.