மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 74,662 கன அடியாக அதிகரித்துள்ளது. கனமழையால் கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பியதால், உபரி நீர் தொடர்ந்து திறந்து விடப்படுகிறது. கடந்த 30ம் தேதி மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியதால் அணைக்கு வரும் தண்ணீர் அனைத்தும் காவிரியில் திறந்து விடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு குறைந்துள்ளதால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் குறைந்துள்ளது. அணைக்கு கடந்த 1ம் தேதி வினாடிக்கு 1.70 லட்சம் கனஅடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக குறைந்து நேற்று காலை 70 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு 74,662 கன அடியாக அதிகரித்தது.
அணையில் இருந்து வினாடிக்கு 70,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணை நீர்மட்டம் 120.10 அடியாகவும், நீர் இருப்பு 93.63 டிஎம்சியாகவும் உள்ளது. தொடர்ந்து 5வது நாளாக அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியாக உள்ளது. அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்படுவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நீடிக்கிறது. கடலோர பகுதிகளை வருவாய் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
85 ஆயிரம் கனஅடி: இதனிடையே, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மீண்டும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை வினாடிக்கு 75 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து மாலையில் வினாடிக்கு 85 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. மேட்டூர் அணையின் உபரிநீர் கால்வாயான 16 மதகுகள் மூலம் காவிரி நீர் வெளியேற்றப்படுகிறது.