மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,18,296 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து இதே அளவு நீடித்தால் இன்னும் 4 நாட்களில் அணை நிரம்ப வாய்ப்புள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அணையின் நீர் கொள்ளளவு 63.69 டிஎம்சியில் இருந்து 67.06 டிஎம்சியாக உயர்ந்தது.
கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டதால், காவிரியில் கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு கடந்த 10 நாட்களாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்றிரவு வினாடிக்கு 81,552 கனஅடியாக இருந்த நீர்வரத்து, காலை 93,828 கனஅடியாகவும், மதியம் 1,18,009 கனஅடியாகவும், மாலை 4 மணிக்கு 1,18,296 கனஅடியாகவும் அதிகரித்தது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி 99.11 கன அடியாக இருந்த அணை நீர்மட்டம் காலை 9 மணி அளவில் 100 அடியை எட்டியது. அணையின் 16 மதகுகள் நிரம்பியுள்ளன. இதைத்தொடர்ந்து நீர்வளத்துறை அதிகாரிகள் காவிரி தாய்க்கு சிறப்பு பூஜை செய்து நன்றி தெரிவித்தனர். மேலும், காவிரி நீரை மலர் தூவி வரவேற்றனர். அணையில் இருந்து குடிநீருக்காக 1,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணைக்கு வரும் நீரை விட திறப்பு குறைவாக உள்ளதால், நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. காலை 99.11 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் மாலையில் 101.70 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 63.69 டிஎம்சியில் இருந்து 67.06 டிஎம்சியாக உயர்ந்துள்ளது. கடந்த 12 நாட்களில் அணையின் நீர்மட்டம் 58.48 அடியாக உயர்ந்து 53.26 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், அணையில் இருந்து விரைவில் தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், நீர்வளத்துறை அதிகாரிகள் 16 கண்மாய்கள், வலதுகரை, இடதுகரை பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
கடலோர மக்களுக்கு எச்சரிக்கை: மத்திய நீர்வள ஆணையம் இன்று மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், மேட்டூர் அணைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலைக்குள் 1.45 லட்சம் கன அடி தண்ணீர் வந்து சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும், ஆற்றில் படகு இயக்கவோ, மீன் பிடிக்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம் என வருவாய்த்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர்.
நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், ”அணையின் மொத்த நீர் இருப்பு, 93 டி.எம்.சி.,யாக உள்ளது. தற்போது 67 டிஎம்சி தண்ணீர் நிரம்பியுள்ள நிலையில் அணை நிரம்ப 26 டிஎம்சி தண்ணீர் தேவை. அணைக்கு நீர்வரத்து ஒரு லட்சம் கன அடிக்கு மேல் உள்ளதால், நீர்வரத்து மேலும் உயர வாய்ப்புள்ளது. பிலிகுண்டுலு பகுதிக்கு இன்று மாலை 1.30 லட்சம் கனஅடி நீர்வரத்து உள்ளது. தற்போது அணைக்கு வரும் தண்ணீரின் அளவு தொடர்ந்தால் இன்னும் 3 அல்லது 4 நாட்களில் நிரம்பும் வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.