சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 69.80 அடியில் இருந்து இன்று 75 அடியாக உயர்ந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 53,830 கன அடியில் இருந்து 64,033 கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் காவிரி மற்றும் கிளை நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, காவிரியின் முக்கிய கிளை நதியான கபினியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கர்நாடகாவில் உள்ள கபினி அணை நிரம்பியது. இதையடுத்து, கபினி அணையில் இருந்து காவிரியில் உபரி நீர் திறக்கப்பட்டு, மேட்டூர் அணைக்கு தண்ணீர் வந்து சேர்ந்தது.
இதேபோல் கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கேஆர்எஸ் அணையும் அதன் கொள்ளளவை எட்டியுள்ளது. எனவே பாதுகாப்பு கருதி கேஆர்எஸ் அணையில் இருந்து உபரி நீரும் காவிரியில் திறந்து விடப்படுகிறது. கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டதால், மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக அதிகளவு நீர்வரத்து இருந்து வருகிறது.
அணைக்கு நேற்று வினாடிக்கு 53,830 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 64,033 கன அடியாக அதிகரித்தது. அதிக நீர் வரத்து காரணமாக நேற்று 69.80 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 75 அடியாக உயர்ந்தது. காவிரி கரையோர மாவட்டங்களுக்கு குடிநீருக்காக அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி வீதம் மட்டுமே தண்ணீர் திறந்து விடப்படுகிறது.