சென்னை: ‘மம்ப்ஸ்’ என்று அழைக்கப்படும் ‘பொண்ணுக்கு வீங்கி’, பாராமிக்ஸோவைரஸால் பரவுகிறது. இந்த வைரஸ் உமிழ்நீர் சுரப்பிகளை பாதித்து காதுக்கும் தாடைக்கும் இடையே கன்னங்களில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இது சோர்வு, கடுமையான வலி, காய்ச்சல், தலைவலி மற்றும் பசியின்மை ஆகியவற்றையும் ஏற்படுத்துகிறது. இது எளிதில் பரவக்கூடியது.
இது இருமல், தும்மல், சளி மற்றும் சளியால் பாதிக்கப்பட்டவர்களின் உமிழ்நீர் துளிகள் மூலம் மற்றவர்களுக்கு பரவுகிறது. அதன் விளைவுகளின் காலம் ஒரு வாரம் முதல் 16 நாட்கள் வரை. குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டால், தொற்று சரியாகிவிடும்.

கடந்த 2021-22 காலகட்டத்தில் தமிழகத்தில் 61 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 2022-23-ல் 129 ஆகவும், 2023-24-ல் 1,091 ஆகவும் அதிகரித்துள்ளது. எம்ஆர் எனப்படும் தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி மட்டுமே தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் வழங்கப்படுகிறது. மம்ப்ஸ் அதில் சேர்க்கப்படவில்லை. இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டும் பொண்ணுக்கு வீங்கி அதிகரித்து வருவதால், அந்த நோய்க்கான தடுப்பூசியை, தேசிய அட்டவணையில் சேர்க்க வேண்டும் என, தமிழ்நாடு பொது சுகாதார துறை ஆராய்ச்சி இதழ் வலியுறுத்தியுள்ளது.