சிவகங்கை: ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டில் போட்டியிடும் காளைகளை அலங்கரிக்க கழுத்தில் மணி, சலங்கை தயாரிக்கும் பணி சிவகங்கையில் தீவிரமடைந்துள்ளது. தை மாதம் பிறந்தாலே பொங்கல் பண்டிகை, கிராம கோவில் திருவிழா என தென் மாவட்டங்கள் களை கட்ட ஆரம்பித்து விடும். தமிழர்களின் பாரம்பரியத்தை உலகுக்கு எடுத்துரைத்த ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு போட்டிகளுக்கு பஞ்சம் இருக்காது.
குறிப்பாக, மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு அலங்காநல்லூர், சிவகங்கை மாவட்டம் சிறாவயல், கண்டுப்பட்டி, அரளிப்பாறை, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை உள்ளிட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகள் மிகவும் பிரபலம். போட்டிகளில் பங்கேற்கும் காளைகளை அலங்கரிப்பதில் காளை வளர்ப்போர் தனி ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காளைகள் போட்டிகளில் பங்கேற்கும் போது, அவை அணியும் ஆபரணங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என்றால் மிகையில்லை.
சிவகங்கை அருகே ஒக்கூரில் காளைகளுக்கு பல்வேறு வண்ணங்களில் செய்யப்பட்ட கழுத்துப்பட்டைகள். தோலால் செய்யப்பட்ட கழுத்துப்பட்டைகள், அரியக்குடி மணி, நாகரத்தாமணி, வெங்கலமணி, வெள்ளிமணி, கால் சலங்கை, கழுத்துமணி, மூக்குக்கயிறு, பிடி கயிறு, நெற்றிப் பட்டை, காது தோடு போன்றவை செய்யப்படுகின்றன. நெற்றியில் பட்டைக்கு ரூ.350, கால் சலங்கை ரூ.1,000, கழுத்து சலங்கை ரூ.1,200 முதல் ரூ.5,000. மூக்கு கயிறு, பிடி கயிறு ரூ.300 முதல் ரூ.500 வரை.
தைத் திருவிழா நெருங்கி வருவதால், வயலில் காளைகள் அட்டகாசம் செய்யும் போது, சிவகங்கை மாவட்டத்திற்கே தனி அடையாளமாக இருக்கும். இங்கு மாவட்டம் மட்டுமின்றி ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, விருதுநகர் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் கால்நடை வளர்ப்போர் வந்து வாங்கிச் செல்கின்றனர். இதுகுறித்து ராசு கூறுகையில், “கடந்த 26 வருடங்களாக குடும்பத்துடன் சேர்ந்து இந்தத் தொழிலை செய்து வருகிறேன்.
ஆர்டர் கொடுத்தாலும் சரியான அளவில் தயாரித்து வருகிறோம். இதனை காளைகளுக்கு அணிவிப்பதால் தனி கௌரவம் கிடைக்கும். மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விலையில் சிறிது மாற்றம் இருக்கும். தற்போது சீசன் தொடங்க உள்ளதால் ஆர்டர்கள் வருகின்றன,” என்றார்.