தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் பாஜகவுக்கு எதிராக கடும் விமர்சனம் மேற்கொண்டுள்ளார். “மிரட்டுவது உங்கள் டிஎன்ஏவில் இருக்கலாம்; துணிந்து மாநில உரிமைகளுக்காக எதிர்த்து நிற்பது எங்கள் டிஎன்ஏவில் இருக்கிறது” என அவர் தெரிவித்துள்ளார்.

துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்கக்கூடாது என பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மிரட்டப்பட்டதாக ஆளுநர் கூறியிருக்கிறார். ஆனால், ஏற்கனவே அவர் கூட்டிய மாநாட்டில் பங்கேற்றவர்களே இப்போது ஏன் பங்கேற்கவில்லை என்ற கேள்வி எழுப்பிய அமைச்சர் செழியன், அதற்கு பதில் கூற ஆளுநர் பட்டம் படிக்கவே தேவையில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
தமிழக சட்டமன்றத்தில் இருமுறை நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுத்ததைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் அரசியல் சாசனத்தின் 142-ஆவது பிரிவை பயன்படுத்தி தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில், மசோதாக்களுக்கு முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. இதைத்தான் தாங்கிக்கொள்ள முடியாமல் ஆளுநர் ரவி, துணைவேந்தர் மாநாட்டை நடத்த முயற்சித்ததாகவும், அதை உதாசீனப்படுத்துவது சட்டபூர்வமானது எனவும் செழியன் வலியுறுத்தினார்.
ஆளுநர் ரவியின் செயல் சட்டத்திற்கு எதிரானது என்றும், துணைவேந்தர்கள் சட்டத்தின் அடிப்படையில் தான் பங்கேற்பை தவிர்த்தனர் என்றும் அவர் கூறினார். உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்க்கும் வகையில் அரசியல் செய்யும் ஆளுநரின் முயற்சி தேக்க நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.
பா.ஜ.க. அரசால் அமலாக்கத்துறை, வருமானவரி, சிபிஐ போன்ற அமைப்புகள் பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் மிரட்டப்படுகிறார்கள் என்றும், அதற்கு தமிழக அரசு சட்டப்படி எதிர்வினை அளித்து வருகிறது என்றும் செழியன் கூறினார். ஆளுநர்கள் பல்கலைக்கழக வேந்தராக இருப்பதற்கான உரிமை அரசியலமைப்பில் இல்லை என்றும், மத்திய அரசு ஆளுநர்களை அரசியல் கருவியாகப் பயன்படுத்தி வருகிறது என்றும் அவர் கடுமையாக குற்றம் சாட்டினார்.
முன்பு குஜராத் முதல்வராக இருந்த போது நரேந்திர மோடி கூறிய “அரசியல்வாதிகளை ஆளுநர்களாக நியமிக்கக் கூடாது” என்ற வார்த்தைகளை நினைவுபடுத்திய அமைச்சர் செழியன், பிரதமராக ஆன பிறகு மோடியின் அரசு தான் அதற்கு எதிராக செயல்பட்டுவிட்டதாக சாடினார். ஆளுநர்கள் மூலமாகவே பாஜக அரசியல் நடத்துகிறது என்பதற்காகவே ஆர்.என்.ரவி, பன்வாரிலால் புரோகித் உள்ளிட்டோரை தமிழகத்திற்கு நியமித்ததாகவும் குற்றம்சாட்டினார்.
“மிரட்டல் அரசியல் என்பது பாஜகவின் அடையாளமாகவே உள்ளது. ஆனால், தமிழக அரசு சட்டத்தையும் உரிமையையும் நம்பி தைரியமாக நின்று கொண்டே இருக்கும்” என அமைச்சர் செழியன் கூறினார்.