சென்னை: ரயில் டிக்கெட் பதிவு முதல் முன்பதிவு செய்யாத டிக்கெட் வரை ரயில் பயணம் தொடர்பான பல்வேறு சேவைகளை வழங்கும் ‘ஸ்வாரெயில்’ என்ற மொபைல் செயலியை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. இது தற்போது பீட்டா சோதனைக்காக வெளியிடப்பட்டுள்ளது. இது விரைவில் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய மக்கள் போக்குவரத்துக்காக ரயில் சேவைகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். மக்கள் குறுகிய தூரம் முதல் நீண்ட தூரம் வரை ரயிலில் பயணம் செய்கிறார்கள். டிஜிட்டல் உலகில் ரயில் பயணம் தொடர்பான பல்வேறு மொபைல் ஆப்களை பயன்படுத்துபவர்கள் உள்ளனர். இந்த நிலையில்தான் இந்திய ரயில்வே ‘ஸ்வாரெயில்’ செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ரயில்வே தகவல் அமைப்புகளுக்கான மையத்தால் (CRIS) வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆப் பயணிகளுக்கு ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தல், PNR நிலையை அறிவது மற்றும் பயணத்தின் போது உணவை ஆர்டர் செய்தல் போன்ற எண்ணற்ற சேவைகளை வழங்குகிறது.
இப்போது, பயணிகள் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் மற்றும் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகள் என ஒவ்வொரு தேவைக்கும் பல்வேறு ஆப்ஸைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. அதற்கான தீர்வை வழங்கும் வகையில் ‘ஸ்வாரெயில்’ ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலியின் பீட்டா சோதனை முடிந்ததும், இது Apple App Store மற்றும் Google Play Store இல் உள்ள பயனர்களுக்குக் கிடைக்கும். இந்த செயலியை தங்கள் ஃபோன்களில் நிறுவும் பயனர்கள் பதிவு செய்து உள்நுழையலாம்.
யுடிஎஸ் மொபைல் மற்றும் ஐஆர்சிடிசி ரெயில் கனெக்ட் போன்ற பயன்பாடுகளை ஏற்கனவே பயன்படுத்தும் பயனர்கள் அந்த உள்நுழைவு விவரங்களை வழங்குவதன் மூலம் அதைப் பயன்படுத்தலாம். பயனர்களுக்கு பயன்படுத்த எளிதான அனுபவத்தை வழங்கும் நோக்கத்துடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த செயலியின் முகப்புப் பக்கத்திலிருந்து, ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம், முன்பதிவில்லா டிக்கெட்டுகளைப் பெறலாம்.
பிளாட்பார்ம் டிக்கெட்டுகளைப் பெறலாம், பார்சல் தொடர்பான விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம், ரயில் மற்றும் பிஎன்ஆர் நிலையை நிகழ்நேரத்தில் அறிந்து கொள்ளலாம், ரயில் பயணத்தின் போது உணவை ஆர்டர் செய்யலாம் மற்றும் புகார் அளிக்கலாம். ஒட்டுமொத்தமாக, இந்த செயலியானது ரயில் பயணிகளுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் பல்வேறு சேவைகளை வழங்குவதாக கூறப்படுகிறது.