சென்னை: பிரபல பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி வெளிநாட்டு இந்தியர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட புதிய சேமிப்புக் கணக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது. NRE கணக்குகள் என்று அழைக்கப்படும் இவை வெளிநாட்டு இந்தியர்கள் தங்கள் வருமானத்தை வசதியாக நிர்வகிக்கவும் மாற்றவும் பயன்படுத்தக்கூடிய சேமிப்புக் கணக்குகள்.
இந்தியன் வங்கி இந்த சிறப்பு சேமிப்புக் கணக்கு வகைகள் மற்றும் பிரீமியம் டெபிட் கார்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப் புதிய திட்டங்களை சமீபத்தில் இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பினோத் குமார், வங்கியின் நிர்வாக இயக்குநர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் முன்னிலையில் அறிமுகப்படுத்தினார்.

இந்த புதிய திட்டங்கள் வெளிநாட்டு இந்தியர்களின் தேவைகளையும் அவர்களின் மாறிவரும் நிதி வாழ்க்கை முறைகளையும் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தியன் வங்கியின் உயர்நிலை டெபிட் கார்டுகளான IND D’Elite, IND Premium, IND Plus முழுவதும் இந்தத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இந்த டெபிட் கார்டுகள் விமான நிலைய லவுஞ்ச் அணுகல், தனிப்பட்ட விபத்து காப்பீடு மற்றும் பிரத்யேக விசுவாசச் சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு தனித்துவமான நன்மைகளை வழங்குகின்றன.
“எங்கள் வெளிநாட்டு இந்திய வாடிக்கையாளர்களுக்கு வசதி, பாதுகாப்பு மற்றும் மதிப்பை முன்னுரிமைப்படுத்தும் உயர்தர டிஜிட்டல் வங்கி தீர்வுகளை வழங்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். இது வங்கிக்கும் உலகளாவிய இந்திய சமூகத்திற்கும் இடையிலான உறவை மேலும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது,” என்று அவர் கூறினார். இந்த தகவல் இந்திய வங்கியின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.