சென்னை: ”அஞ்சல் அலுவலகங்களில், ‘இ – கேஒய்சி’ மூலம், சேமிப்பு கணக்கு துவங்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது,” என, சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர், ஜி.நடராஜன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கு, தொடர் வைப்பு கணக்கு (ஆர்டி) உள்ளிட்ட சேமிப்பு கணக்குகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தக் கணக்குகளைத் தொடங்க விரும்புவோர் தங்களது முகவரிச் சான்றிதழ், ஆதார் எண் உள்ளிட்ட ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இந்நிலையில், காகிதப் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில், தபால் நிலையங்களில் ‘இ-கேஒய்சி’ மூலம் சேமிப்புக் கணக்கு தொடங்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, வாடிக்கையாளர்கள் தங்களது ஆதார் எண் மற்றும் கைரேகை (பயோமெட்ரிக்) பதிவைப் பயன்படுத்தி எளிதாக சேமிப்புக் கணக்கைத் தொடங்கலாம்.

இதற்காக, சென்னை நகர அஞ்சல் வட்டத்தில் உள்ள, பாரிமுனை, அண்ணாசாலை, பார்க் டவுன், தி.நகர், மயிலாப்பூர், செயின்ட் தாமஸ் மவுண்ட், அம்பத்தூர், ஆவடி, தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், அரக்கோணம், ராணிப்பேட்டை, வி. திண்டிவனம் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் படிவங்களை நிரப்புவதற்கும், கவுன்டர்களில் நிற்பதற்கும் செலவிடும் நேரம் குறையும்.
மேலும், இம்மாத இறுதிக்குள் 557 துணை தபால் நிலையங்களில் இந்த வசதி ஏற்படுத்தப்படும். பயோமெட்ரிக் முறையில் பொதுமக்கள் தங்கள் சேமிப்புக் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்யவும், எடுக்கவும் முடியும். இதற்காக, படிவங்களை நிரப்ப வேண்டிய அவசியமில்லை. சென்னை நகர அஞ்சல் வட்டத்திற்கு உட்பட்ட தபால் நிலையங்களில் இதுவரை 5,500 சேமிப்பு கணக்குகள் ‘இ-கேஒய்சி’ மூலம் தொடங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.