சென்னை: மின் வாரிய அலுவலகங்களில், ‘கியூஆர் லைன்’ மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, மின் கட்டணம் செலுத்த மின் வாரிய அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டிய நிலை இருந்தது. பின்னர் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் மின் கட்டண வசூல் மின்னணு (டிஜிட்டல்) முறைக்கு மாறியது.
இதன்படி நெட்பேங்கிங், பாரத் பில் பேமென்ட் சேவை, டெபிட், கிரெடிட் கார்டுகள், இ-சேவை மையங்கள், தபால் நிலையங்கள் மூலம் மின் கட்டணத்தை மின்னணு முறையில் செலுத்தும் வசதி உள்ளது. இந்நிலையில், மின் வாரிய அலுவலகங்களிலும், ‘கியூஆர் லைன்’ வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: தற்போது 83% நுகர்வோர் மின் கட்டணத்தை மின்னணு முறையில் செலுத்துகின்றனர். கடந்த 2023-24ஆம் ஆண்டில் மின்னணு முறையில் கட்டணம் செலுத்துவதன் மூலம் ரூ.50,217 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 31 சதவீதம் அதிகம். குறிப்பாக, தொழிற்சாலைகள் உட்பட உயர் மின்னழுத்தப் பிரிவைச் சேர்ந்த அனைத்து நுகர்வோரும் மின் கட்டணத்தை மின்னணு முறையில் செலுத்துகின்றனர்.
தவிர, பணம் செலுத்தும் கடைசி தேதிக்கு 3 நாட்களுக்கு முன்பு நுகர்வோரின் செல்போனுக்கு நினைவூட்டல் அனுப்பப்படும். அதேபோல், பணம் செலுத்தியவுடன், அதை உறுதிப்படுத்தும் தகவல் நுகர்வோருக்கு அனுப்பப்படும். இதன்படி மாதம் ஒன்றுக்கு 3 கோடி குறுஞ்செய்திகள் அனுப்பப்படுகின்றன.
இந்நிலையில், மின் கட்டணம் செலுத்துவதை இன்னும் எளிதாக்கும் வகையில், ‘கியூஆர் லைன்’ வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வடமாவட்டங்களில் உள்ள மின் வாரிய அலுவலகங்களில் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டம் விரைவில் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.