பேருந்துகளில் பணமில்லா (டிஜிட்டல்) பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் சிங்கார சென்னை பயண அட்டை திட்டத்தை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று தொடங்கி வைத்தார். சிங்கார சென்னை பயண அட்டையானது பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ அமைப்புகள் உட்பட பல போக்குவரத்து பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தப்படலாம்.
சிங்கார சென்னை ஸ்மார்ட் கார்டு ஏற்கனவே 2023-ம் ஆண்டு மெட்ரோ ரயில்களில் பயன்படுத்த அறிமுகப்படுத்தப்பட்டது. இனி, இந்த அட்டையைப் பயன்படுத்தி மாநகரப் பேருந்துகளிலும் பொதுமக்கள் பயணிக்கலாம். இந்த அட்டையை சென்னை பல்லவன் சாலையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக மைய அலுவலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் அல்பி ஜான் வர்கீஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து, மாநகர போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:- இத்திட்டத்தில், முதற்கட்டமாக, 50,000 கார்டுகள் எஸ்பிஐ மூலம் இலவசமாக வழங்கப்படும். கோயம்பேடு, பாரிமுனை, சென்ட்ரல் ரயில் நிலையம், தாம்பரம், பூந்தமல்லி, திருவான்மியூர், செங்குன்றம், வேளச்சேரி, கிண்டி, ஆவடி, தியாகராயநகர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, அம்பத்தூர் ஓடி, அடையாறு, அய்யப்பன்தாங்கல், கிளாம்பாக்கம், வடபழனி, பெரம்பூர், சைதாப்பேட்டை உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் உள்ள மாநகர போக்குவரத்துக் கழக டிக்கெட் விற்பனை மையங்களில் இந்த அட்டைகள் இலவசமாக வழங்கப்படும்.
இந்த கார்டுகளை ரீசார்ஜ் செய்து பயன்படுத்தலாம். ஆன்லைன் போர்ட்டல்கள், மொபைல் ஆப்ஸ் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மாநகர போக்குவரத்து கழக டிக்கெட் விற்பனை மையங்கள் போன்ற பல்வேறு வழிகளில் கார்டை எளிதாக ரீசார்ஜ் செய்யலாம். மேலும், பஸ்களில் பயணிப்பவர்களிடம் இருந்து இந்த கார்டுக்கு ரீசார்ஜ் செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.