சென்னை: பெண்களுக்கு நிதியுதவி மற்றும் நிதி சுதந்திரம் அளிக்கும் வகையில் தொடங்கப்பட்ட மகளிர் மதிப்பு சேமிப்பு திட்டம் மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, இத்திட்டத்தில் சேராத பெண்கள் உடனடியாக இத்திட்டத்தில் சேர வேண்டும் என சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் நடராஜன் தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட்டில் பெண்களுக்கு நிதியுதவி மற்றும் அதிகாரமளிக்கும் வகையில், மத்திய நிதி அமைச்சகம் மார்ச் 31, 2023 அன்று ‘மகளிர் மதிப்பு சேமிப்புத் திட்டத்தை’ அறிமுகப்படுத்தியது.
இந்தத் திட்டத்தின் கீழ், ஒரு பெண் குழந்தை அல்லது தனிப்பட்ட பெண் பெயரில் சேமிப்புக் கணக்கு தொடங்கலாம். 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த சேமிப்புத் திட்டத்தை தனித்தனியாகவும், 18 வயதுக்குட்பட்ட பெண்கள் காப்பாளர் மூலமாகவும் இந்த சேமிப்புத் திட்டத்தைத் திறக்கலாம். குறைந்தபட்ச முதலீடு ரூ. 1,000 மற்றும் அதிகபட்சம் ரூ. 2 லட்சம் வரை முதலீடு செய்யலாம். கணக்குத் தொடங்கிய நாளிலிருந்து 2 ஆண்டுகளில் இந்தத் திட்டம் முதிர்ச்சியடையும். அதன்படி, இத்திட்டம் இம்மாதம் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்நிலையில், இதுவரை இத்திட்டத்தில் சேராதவர்கள் உடனடியாக இத்திட்டத்தில் சேருமாறு அஞ்சல் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து, சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் ஜி.நடராஜன் கூறியதாவது: பெண்களுக்கு நிதி அதிகாரம் மற்றும் நிதி சுதந்திரம் அளிக்கும் வகையில், மத்திய அரசு துவக்கியுள்ள, மகளிர் மதிப்பு திட்டம், பெண்களுக்கான சிறந்த சேமிப்பு திட்டமாகும். இந்தத் திட்டத்தில் செய்யப்படும் முதலீட்டின் வட்டி விகிதம் ஆண்டுக்கு அதிகபட்சமாக 7.5 சதவீதமாக இருக்கும். கணக்கு தொடங்கிய நாளிலிருந்து ஒரு வருடம் முடிந்த பிறகு 40 சதவிகிதம் மீதித் தொகையை திரும்பப் பெற அனுமதிக்கப்படும். பாதுகாவலரின் மரணம் அல்லது தீவிர மருத்துவ காரணங்களால் கணக்கு வைத்திருப்பவர்கள் இந்தக் கணக்கை மூடலாம். கணக்கு தொடங்கி ஆறு மாதங்களுக்குப் பிறகு எந்த நேரத்திலும் கணக்கை முன்கூட்டியே மூடலாம்.
இருப்பினும், அவ்வாறு மூடப்படும் பட்சத்தில், வட்டி விகிதம் 2 சதவீதம் குறைக்கப்படும். இத்திட்டம் வரும் 31-ம் தேதியுடன் முடிவடைய உள்ளதால், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பெற்றோர் அருகில் உள்ள தபால் நிலையங்களை அணுகி இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு https://www.indiapost.gov.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும். இத்திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து, சென்னை நகர்ப்புற மண்டலத்திற்கு உட்பட்ட தபால் நிலையங்களில் 94,900 கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. ரூ. 843 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு நடராஜன் கூறினார்.