சென்னை: சென்னையில் நாளை (மார்ச் 23) நடைபெறவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் மைதானம் அருகே உள்ள முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்று சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறும் நாட்களில் சென்னையில் மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்று காவல் துறை தெரிவித்துள்ளது.

போட்டிகளைக் காண கார் பாஸ் வைத்திருப்பவர்கள் தங்கள் கார்களை குறிப்பிட்ட இடங்களில் நிறுத்தலாம். கார் பாஸ் இல்லாதவர்கள் கதீட்ரல் சாலையில் இருந்து ஆர்.கே. சாலை வழியாகச் சென்று, பின்னர் காமராஜ் சாலையை அடைந்து, மெரினா கடற்கரை சாலையில் தங்கள் காரை நிறுத்தி, சுரங்கப்பாதையைப் பயன்படுத்தி மைதானத்திற்கு நடந்து செல்லலாம்.
மேலும், டாக்ஸி மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் அண்ணா சாலையைப் பயன்படுத்தி வாலாஜா சாலையை அடைந்து, மைதானத்திற்கு அருகில் பயணிகளை இறக்கிவிடலாம். அங்கு, சிவானந்தா சாலையில் தங்கள் வாகனங்களை நிறுத்தி பயணிகளை இறக்கி ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
இதனுடன், மினிபஸ்கள் மற்றும் எம்டிசி பேருந்துகள் வாலாஜா சாலையில் அனுமதிக்கப்படும். பொதுமக்கள் பிரஸ் கிளப் சாலை வழியாக மைதானத்தை அடையலாம். இதற்கிடையில், வாலாஜா சாலையைப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.
எம்ஆர்டிஎஸ் சேப்பாக்கம் ரயில் நிலையம் அல்லது அரசு எஸ்டேட் மெட்ரோ ரயில் நிலையம் வழியாக மைதானத்தை அடையுமாறு பொதுமக்களுக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.