சென்னை: திறந்தவெளி கல்வி, தொலைதூரக் கல்வி மற்றும் ஆன்லைன் கல்வி படிக்க விரும்பும் மாணவர்களுக்கான புதிய சேர்க்கை நடைமுறைகளை, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., வெளியிட்டுள்ளது.
நாட்டில் உள்ள பல்வேறு அங்கீகரிக்கப்படாத கல்வி நிறுவனங்கள் ஆன்லைன், தொலைதூர மற்றும் திறந்த அணுகல் மூலம் பல்வேறு படிப்புகளை நடத்துகின்றன. இதில் படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாக புகார்கள் மூலம் யுஜிசிக்கு தெரிய வந்தது.
இதை தடுக்கும் ஆலோசனை கூட்டம், டில்லியில், ஜூன், 25ல் நடந்தது.அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, புதிய நடைமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த கல்வியாண்டுக்கான, தொலைநிலைக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான புதிய நடைமுறை அடுத்த மாதம் அமலுக்கு வருகிறது. அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களில் மட்டுமே மாணவர்கள் சேர்க்கை பெறுவதை வெளிப்படைத்தன்மையுடன் உறுதி செய்ய முடியும். UGC இணையதளத்தில் https://deb.ugc.ac.in இல் அங்கீகரிக்கப்பட்ட தொலைநிலைக் கல்வி நிறுவனங்களின் பட்டியலை மாணவர்கள் பார்க்கலாம்.
மேலும், மாணவர்களுக்கான UGC – DEB இணைய போர்ட்டலில் deb.ugc.ac.in/StudentDebId இல் அவர்களின் ‘அகாடமிக் பேங்க் ஆஃப் கிரெடிட்’ ஐடியைப் பயன்படுத்தி பதிவு செய்யவும். தனிப்பட்ட வாழ்நாள் அடையாளக் குறியீட்டைப் பெறுங்கள். இதைப் பயன்படுத்தினால் மட்டுமே தொலைதூரக் கல்வி சேர்க்கையில் சேர முடியும். அங்கீகரிக்கப்பட்ட அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் இந்த வாழ்நாள் தகவல் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்ள வலியுறுத்தப்படும். இதனால், அங்கீகரிக்கப்படாத கல்வி நிறுவனங்கள் மற்றும் படிப்புகளில் சேருவதை தவிர்க்கலாம். மேலும் விவரங்களை https://deb.ugc.ac.in இணையதள உதவி மையத்தில் காணலாம்.