இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தை நோக்கி வீசும் மேற்கு திசை காற்றின் வேகத்தில் நிலவும் மாற்றம் காரணமாக, இன்று ஒன்று அல்லது இரண்டு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், சில இடங்களில் மணிக்கு 50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். நாளை முதல் ஜூலை 4-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையின்படி, அதிகபட்சமாக கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் உபாசியிலும், புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையிலும் 4 செ.மீ., சோலையார், சின்சோனா, கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு, திண்டுக்கல் மாவட்டம் நத்தம், விண்ட்வொர்த் நத்தம், நடுவட்டத்தில் 3 செ.மீ., தஞ்சாவூர் மாவட்டம் குறுங்குளம், தேனி மாவட்டத்தில் பெரியாறு 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.