மதுரை: திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:- திருநெல்வேலி மாவட்டத்தில் அகஸ்தியர் கோவில் மற்றும் சொரிமுத்து அய்யனார் கோவில்கள் பாரம்பரிய கோவில்கள் உள்ளன. இந்த பகுதியில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் உள்ளது. இங்கு, அகஸ்தியர் கோயில் அருகே அகஸ்தியர் அருவி அமைந்துள்ளது.
இந்த அருவிக்கு பொதுமக்கள், பக்தர்கள் என ஏராளமானோர் வந்து குளித்து வருகின்றனர். இந்தப் பகுதிக்குள் நுழைய நுழைவுக் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. இந்த நுழைவுக் கட்டணமும் உள்ளூர் மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது. அருவியில் குளிப்பதற்கும், வாகனங்களை நிறுத்துவதற்கும், தமிழக வனத்துறை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் சார்பில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அருவியில் குளிப்பதற்கும், வாகனங்களை நிறுத்துவதற்கும் பேரூராட்சி, நகராட்சி அல்லது ஊராட்சி நிர்வாகம் மட்டுமே பணம் வசூலிக்க வேண்டும். ஆனால், வனத்துறை அதிகாரிகள் சேர்ந்து பணம் வசூலிப்பதை ஏற்க முடியாது. உள்ளூர் மக்களிடம் நுழைவுக் கட்டணம் வசூலிப்பது ஏற்கத்தக்கது அல்ல. எனவே தமிழக வனத்துறை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக அறக்கட்டளையினர் அகஸ்தியர் கோயிலுக்கு வரும் வாகனங்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்களிடம் பணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நுழைவு கட்டணம் வசூலிப்பது தொடர்பாக வனத்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், ”வனத்துறை தாக்கல் செய்த அறிக்கையில், எதற்காக பணம் வசூலிக்கப்படுகிறது என்ற தகவல் இல்லை. பொதுவாக, எவ்வளவு நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டது என்பது மட்டுமே.
இது ஏற்றுக்கொள்ள முடியாதது. நுழைவு கட்டணம் வசூலிப்பது குறித்த வனத்துறை அறிக்கை திருப்திகரமாக இல்லை. வனப் பாதுகாப்பு மற்றும் புலிகள் பாதுகாப்புக்காக அரசிடம் இருந்து பெறும் பணத்தை வனத்துறை என்ன செய்கிறது?” என்று கேள்வி எழுப்பினர். வனத்துறை மீண்டும் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். அதன்பின், மனு மீது நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பித்து உரிய தீர்ப்பை வழங்கும் எனக்கூறி ஒத்திவைத்தனர்.