சென்னை: தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட உயரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நேற்று காலை நிலவரப்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலா மற்றும் சின்னக்கல்லாரில் 4 செ.மீ., மழை பெய்துள்ளது. பந்தலூர், அவலாஞ்சி, 5; மாஞ்சோலை, கூடலூர், வால்பாறை, முள்ளிங்கினாவிளை, காக்கச்சி, 2; தக்கலை, மதுவட்டம், குந்தா, எமரால்டு, கொட்டாரம், குளச்சல், சோலையார், ஆழியாறு, 1 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையின் தீவிரம் குறைந்துள்ளது. அதனால், கனமழைக்கு வாய்ப்பில்லை. அதே சமயம் மேற்கு திசை காற்றின் வேகத்தில் ஏற்படும் மாறுபாட்டால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 29ம் தேதி வரை சில இடங்களில் மிதமான மழை பெய்யும். இன்று சில இடங்களில் மணிக்கு 40 கிமீ வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசும்.
வெப்பநிலையை பொறுத்தமட்டில் கடந்த வாரத்தை விட அடுத்த நான்கு நாட்களில் வெப்பநிலை அதிகரிக்கும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.
மத்திய மற்றும் வடக்கு வங்காள விரிகுடா, வடக்கு ஆந்திர பிரதேசம், தெற்கு அந்தமான், மத்திய மற்றும் தென்கிழக்கு அரேபிய கடற்கரை பகுதிகளில் மணிக்கு 65 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு வரும் 26ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம். அவ்வாறு கூறுகிறது.