சென்னையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணையவிருப்பதாக பரவும் வதந்திகளுக்கு நேரடியாக பதிலளித்துள்ளார். “முதல்வர் ஸ்டாலினுக்கே தெரியும் நான் யாருனு,” என்று கூறிய அவர், திமுகவிடம் பதவிக்காக செல்லும் தன்மை தனக்கில்லை என்றும், அதிமுகவே தனது உயிரும், ஆத்மாவும் என்று வலியுறுத்தினார்.

அதிமுகவில் இரட்டை தலைமை காரணமாக குழப்பங்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஒற்றைத் தலைமை தேவையென நிர்வாகிகள் முடிவு செய்திருந்தனர். அதில் முக்கியமான பங்களிப்பு செய்தவர்களில் ஒருவர் ஜெயக்குமார். எனினும், பாஜகவுடன் அதிமுக இணையக் காரணமாக அவர் பெரும் அதிருப்தியில் உள்ளதாகவே பரவலாக பேசப்பட்டது. ஏற்கனவே அதே காரணத்தால் அன்வர் ராஜா திமுகவில் இணைந்திருந்தார் என்பதும் இதற்குச் சம்மந்தமான தகவல்களைக் கொடுத்தது.
ஆனால், ஜெயக்குமார் இதனை முற்றிலும் மறுத்துள்ளார். திமுகவின் முக்கிய குரூப் அவரை அணுகி அழைத்ததாகவும் கூறப்பட்டது. அதற்கு பதிலளிக்கும் விதமாக, “நான் யாருடைய வீட்டுக்குப் போயும் பதவிக்காக நிற்க மாட்டேன். என் உடலில் ஓடுவது அதிமுக ரத்தம்தான்,” என உறுதியாக கூறியுள்ளார்.
இதில் குறிப்பாக, கடந்த சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணியின் காரணமாகவே தான் தோல்வியடைந்ததாக அவர் ஏற்கனவே குற்றம்சாட்டியிருந்தார். அதிமுகவில் இருப்பதற்கே அவர் பெருமை கொள்கிறார் எனவும், எதிரணியில் போய்விடுவாரென பரவும் யூடியூபர்கள் மற்றும் செய்தி சேனல்கள் தவறாகப் பிரச்சாரம் செய்கிறார்கள் எனவும் கூறியுள்ளார்.
அதிமுக-பாஜக கூட்டணி காரணமாகவே அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தாலும், திமுகவுக்கு செல்லும் எண்ணமே இல்லையெனவும், எந்த தடை வந்தாலும் அதிமுகவில்தான் இருக்கப் போவதாகவும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அவரது இந்த பதிலால், பரவிய வதந்திகள் முற்றுப்புள்ளி பெற்றுள்ளன.