முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் கைப்பற்றப்பட்ட 27 கிலோ தங்க நகைகள் மற்றும் பொருட்களை ஏலம் விடுவது தொடர்பாக அரசு விரைவில் உயர்மட்ட ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல்வராக இருந்த 1991-96 காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் ஜெயலலிதா வீட்டில் தங்கம், வைரம், வெள்ளி உள்ளிட்ட நகைகள், சேலைகள், காலணிகள், சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இந்த வழக்கு தமிழகத்தில் இருந்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதால், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களும் கர்நாடக அரசு கருவூலத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து நீதிபதி குன்ஹா கடந்த 2014-ம் ஆண்டு தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் கைப்பற்றப்பட்ட பொருட்களை ஏலம் விடவும், வழக்கை நடத்திய கர்நாடக அரசுக்கு உரிய தொகையை அரசு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார். இந்தத் தீர்ப்பை 2017-ல் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. அப்போது ஜெயலலிதா மறைந்ததைத் தொடர்ந்து, அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை விவரம் அவருக்குத் தெரிவிக்கப்படவில்லை.
வழக்கு முடிந்து பல ஆண்டுகள் ஆன நிலையிலும், வழக்கு நடத்தி கர்நாடக அரசுக்கு செலுத்திய தொகை வழங்கப்படவில்லை. இந்நிலையில் ஜெயலலிதாவின் நகைகளை 2023-ல் ஏலம் விட வேண்டும் என பெங்களூருவை சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி பெங்களூரு சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதில் ஜெயலலிதாவிடம் இருந்து கர்நாடக அரசு கருவூலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்க தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கர்நாடக அரசுக்கு ரூ.5 கோடி வழங்க வேண்டும். அதைத்தொடர்ந்து கர்நாடக கருவூலத்தில் இருந்து நகை, சொத்து ஆவணங்கள் அடங்கிய 6 பெட்டிகள் தமிழக அரசிடம் கடந்த வாரம் ஒப்படைக்கப்பட்டது.
அதன்படி, 1,562 ஏக்கர் நில ஆவணங்கள், 11,344 சேலைகள், 750 காலணிகள், 91 கைக்கடிகாரங்கள் ஒப்படைக்கப்பட்டன. மேலும், சொத்து பட்டியலில் இருந்த 27 கிலோ எடையுள்ள 468 தங்கம் மற்றும் வைர ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த பொருட்கள் அனைத்தும் சென்னை நந்தனத்தில் உள்ள அரசு கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த ஏலம் குறித்து உயர்மட்ட அதிகாரிகள் விரைவில் ஆலோசிப்பார்கள் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து, அரசு அதிகாரிகள் கூறியதாவது:-
முன்னாள் முதல்வர் ஒருவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்தை எளிதில் ஏலம் விட முடியாது. ஏலம் தொடர்பான நடைமுறைகளையும் கர்நாடக நீதிமன்ற உத்தரவில் குறிப்பிட்டிருக்கலாம். என்பதை பரிசீலித்து, உயர்மட்ட ஆலோசனை நடத்தி, பின்னர் அமைச்சரவையில் விவாதித்து முடிவு எடுக்கப்பட்டு, அரசு உத்தரவு பிறப்பித்து, வருவாய்த்துறை மூலம் மட்டுமே ஏலம் விட முடியும். எனவே, அதிகாரிகளின் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. அதில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறினார்கள்.
இதற்கிடையே, 2026 சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஜெயலலிதாவின் சொத்துக்களை ஏலம் விடுவதற்கான நடவடிக்கையில் ஆளும் அரசு ஈடுபட்டால், அது மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தலாம். மேலும், திமுக அரசு மீது அதிமுகவினர் குற்றச்சாட்டுகளை கூறி அனுதாபம் தேடலாம் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.