சென்னை: என்எல்சி பங்குகளை தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்கும் முடிவை தடுத்து நிறுத்திய பெருமை ஜெயலலிதாவுக்கு மட்டுமே உரியது என்றும், வரலாற்றை திரிபுபடுத்தும் முதல்வரின் பேச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் தொழிற்சங்க அங்கீகாரத்திற்கான தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில், என்.எல்.சி., பங்குகளை விற்று, தனியார்மயமாக்க மத்திய அரசு முயன்றபோது, திமுகவின் நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டது என்ற பொய்யை, உலகமெங்கும் பரப்ப முதல்வர் மு.க.ஸ்டாலின் முயற்சித்துள்ளார்.
இந்தியாவின் சமூக, பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றிய, எரிசக்தித் துறையில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக பெரும் சாதனைகளை நிகழ்த்தி வரும் என்எல்சியின் பங்குகளை 2013-ல் விற்க முன்வந்த அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசின் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்திய பெருமை ஜெயலலிதாவுக்கு மட்டுமே உண்டு என்பது நிறுவனத்தில் பணிபுரியும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் நன்றாகத் தெரியும். தமிழக மக்களின் வாழ்விலும் உணர்வுகளிலும் கலந்துவிட்ட நெய்வேலி லிக்னைட் நிறுவனம், 2013-ல் அந்நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்க முன்வந்தபோது, காங்கிரஸ் கூட்டணி அரசில் அங்கம் வகித்து பொய்யான மவுனம் காத்தார்.

அதைத் தடுத்தோம் என்று இப்போது தம்பட்டம் அடிக்கும் தி.மு.க.வினர் முழு பூசணிக்காயையும் புதருக்கு அடியில் மறைத்து வைத்துள்ளனர். 2013-ம் ஆண்டு மத்திய காங்கிரஸ் ஆட்சியில் திமுக இருந்தபோது மட்டுமல்ல, அதற்கு முன்பு 2003, 2006-ம் ஆண்டுகளில் என்எல்சி பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முயன்றபோதெல்லாம் அதைத் தன் துணிச்சலான நடவடிக்கைகளால் தடுத்து நிறுத்தி, தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் மூலம் என்எல்சி பங்குகளை வாங்கிய பெருமை ஜெயலலிதாவுக்கு உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது.
எனவே, துரோகங்களை மறைக்க வரலாற்றை மாற்ற முயலும் திமுகவுக்கு, வரும் சட்டமன்றத் தேர்தலில், நிறுவனத் தொழிலாளர்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழக மக்களும் தகுந்த பாடம் புகட்டுவார்கள் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்.