பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 27 கிலோ நகைகள், தங்கம், வெள்ளி, வைரம், ஆயிரம் ஏக்கர் நிலங்கள் அனைத்தும் கர்நாடகா கருவூலத்தில் இருந்து தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, வளர்ப்பு மகன் சுதாகரன், இளவரசி மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 27 கிலோ தங்கம், வெள்ளி, வைர நகைகள், 1562 ஏக்கர் நிலப் பத்திரங்களை தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க ஜனவரி 29-ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி, தமிழக உள்துறை இணைச் செயலர் ஹனிமேரி, தமிழக ஊழல் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு எஸ்.பி.விமலா, கூடுதல் எஸ்.பி. புகழ்வேந்தன், இரண்டு உதவிக் காவல் ஆணையர்கள், இரண்டு காவல் ஆய்வாளர்கள், முப்பது போலீஸார் மற்றும் நகை மதிப்பீட்டாளர்கள், வீடியோ மற்றும் புகைப்படக் கலைஞர் ஆகியோர் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு வந்தனர். நேற்று காலை 11.30 மணிக்கு நகைகளை ஒப்படைக்கும் பணி தொடங்கியது. மதியம் 1.45 மணி வரை 157 நகைகள் மதிப்பிட்டு தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.
பின்னர் மாலை 3.05 மணிக்கு நீதிமன்றம் தொடங்கியது. மாலை 5.45 மணி வரை 296 பொருட்கள் மதிப்பிட்டு ஒப்படைக்கப்பட்டன. அதன்பின், கர்நாடகா, தமிழக போலீசாரின் பாதுகாப்பில், சிட்டி சிவில் கோர்ட்டுக்கு சொந்தமான வாகனத்தில், நகைகள், மீண்டும் அரசு கருவூலத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. ஜெயலலிதாவின் நகைகளுக்கு மதிப்பளிக்கும் பணி நேற்று 6 மணி நேரம் நடைபெற்றது. இந்நிலையில் பெங்களூரு நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் நகை, சொத்து ஆவணங்களை மதிப்பிடும் பணி 2வது நாளாக தீவிரமடைந்துள்ளது. அனைத்து நகைகளும் மீண்டும் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டு, மதிப்பீட்டு பணி தொடங்கியது.