தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜூலை 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். மாவட்ட வாரியாக கள ஆய்வுகளை மேற்கொண்டு வரும் முதல்வர், இந்த இரண்டு நாட்களிலும் பல்வேறு திட்டங்களைத் திறந்து வைப்பதோடு, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வுகளில் பங்கேற்கிறார். அவரது வருகையையொட்டி, அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் உற்சாகத்துடன் வரவேற்பு ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

22ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் விமானம் மூலம் கோவை விமான நிலையத்தை எட்டுகிறார். அங்கிருந்து காரில் புறப்பட்டு, திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம், உடுமலைப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். திருப்பூர் மாநகராட்சியின் கோவில்வழி பேருந்து நிலையத்தை திறந்து வைப்பதோடு, வேலம்பாளையத்தில் புதிய அரசு மருத்துவமனைக்கும் முதல்வர் தொடக்கம் கொடுக்கிறார். உடுமலை அருகே பெரியார், அண்ணா, அம்பேத்கர் சிலைகளையும் திறந்து வைக்க உள்ளார்.
23ஆம் தேதி பொள்ளாச்சி அருகே நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதல்வர், பரம்பிக்குளம்-ஆழியார் திட்டத்தில் பங்கு பெற்ற தலைவர்கள் காமராஜர், சுப்பிரமணியன் மற்றும் மகாலிங்கம் சிலைகளை திறந்து வைப்பார். பின்னர், உடுமலை நேதாஜி மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். திட்டப்பணிகள் தொடக்க விழாக்கள், ரோடு ஷோவுகளும் நடைபெறவுள்ளன.
முதல்வரின் வருகையையொட்டி, பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோவை, திருப்பூர் பகுதிகளில் ட்ரோன் கேமரா மற்றும் ரிமோட் வழி இயங்கும் சாதனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து, கோவையில் நடைபெறும் மாஸ்டர் பிளான் 2041 திட்ட ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் கலந்துகொண்டு, அதிகாரிகளும், தொழிலதிபர்களும் இணைந்து எதிர்கால நகர வளர்ச்சிப் திட்டங்களைப் பற்றி ஆலோசிக்கவுள்ளனர்.