சென்னை: தமிழக சட்டசபையில் நேற்று நடந்த நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், நூலகங்கள் குறித்து திமுக உறுப்பினர் க.அன்பழகன் பேசியதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து கூறியதாவது: திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட நூலகங்களுக்கு மாபெரும் தலைவர்கள் பெயர் சூட்டப்பட்டுள்ளதாக கருத்து தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, திருச்சியில் நான் ரூ.290 கோடி செலவில் அடிக்கல் நாட்டிய மாபெரும் நூலகம் என்று பொதுப்பணித்துறையின் 4 ஆண்டு சாதனை புத்தகத்தில் பார்த்தேன். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. கோட்டூர்புரத்தில் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்ட நூலகத்துக்கு அண்ணா நூற்றாண்டு நூலகம் என்று பெயர் சூட்டப்பட்டது. மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டு, ஒரே ஆண்டில் கட்டுமானப் பணிகளை முடித்து மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது மாபெரும் சாதனை என்பது அனைவரும் அறிந்ததே.

இதுவரை சுமார் 16 லட்சம் பொது மக்கள் மற்றும் மாணவர்கள் இந்த நூலகத்தால் பயனடைந்துள்ளனர். சமீபத்தில் கோவையில் நடந்த அரசு விழாவில் கலந்து கொண்டபோது கோவையில் பிரமாண்ட நூலகம் அமைக்கப்படும் என அறிவித்தேன். கடந்த நவம்பர் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டு அதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. அதேபோல் திருச்சியில் அறிவிக்கப்பட்ட நூலகத்துக்கு கடந்த மாதம் அடிக்கல் நாட்டினேன்.
இதற்கான பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. கோவையில் பெரியார், சென்னையில் அண்ணா, மதுரையில் கலைஞர் பெயர்களில் நூலகங்கள் நிறுவப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து திருச்சியில் கட்டப்படும் நூலகத்துக்கு காமராஜரின் பெயரைச் சூட்டுவது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.
எனவே, திருச்சியில் கட்டப்பட்டு வரும் நூலகத்துக்கு, தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் பள்ளிகளை துவக்கி, மதிய உணவு வழங்கி, லட்சக்கணக்கான குடும்பங்களின் கல்விக் கண்களைத் திறந்து, தமிழகத்தின் கல்விப் புரட்சிக்கும், எதிர்கால வளர்ச்சிக்கும் வழி வகுத்த காமராஜர் பெயரை சூட்டுவது பொருத்தமாக கருதி, திருச்சியில் கட்டப்பட்டு வரும் நூலகத்துக்கு காமராஜர் பெயரை சூட்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அரசாணை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.