கரூரில் தவெக தலைவர் விஜயின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் பலியானது தமிழக அரசியலை அதிரவைத்துள்ளது. இந்த சம்பவம் குறித்து பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, “கரூர் சம்பவத்தில் முதல் குற்றவாளி கரூர் எஸ்.பி தான். பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாதது காவல்துறையின் மிகப்பெரிய தவறு. எனவே அவரை உடனடியாக சஸ்பெண்ட் செய்து கைது செய்து விசாரணை நடத்த வேண்டும். இதில் திமுக அரசே முழுப் பொறுப்பேற்க வேண்டும்” என்றார்.

மேலும், தவெக தலைவர் விஜய் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க கரூர் செல்ல விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அதற்காக காவல்துறையிடம் அனுமதி கேட்க தேவையில்லை என்றும் எச்.ராஜா தெரிவித்தார். “ஒரு அரசியல் தலைவருக்கு மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் செல்லும் உரிமை உண்டு” என்றார்.
அத்துடன், திருமாவளவன் சம்பவம், உதயநிதியின் அரசியல் திறமை மற்றும் திமுக அரசின் சாதி அரசியல் குறித்தும் எச்.ராஜா கடும் விமர்சனம் செய்தார். “திமுக மக்களை ஏமாற்றும் நாடகம் ஆடுகிறது. 2026 தேர்தலில் மக்கள் அதற்கு தக்க பாடம் புகட்டுவார்கள்” என எச்சரித்தார்.