கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நாம் தமிழர் கட்சியினர் சாட்டை துரைமுருகன், 8K திறன் கொண்ட கேமராவில் பதிவான காட்சிகள் வெளியானால் உண்மை முழுமையாக தெரிய வரும் என தெரிவித்துள்ளார். இது விஜயின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதேசமயம், கரூர் போலீசார் ஆதவ் அர்ஜுனாவின் வீட்டில் சிசிடிவி காட்சிகளை கேட்டு கடிதம் அளித்துள்ளனர். தவெக துணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமாரிடம், பிரச்சார பேருந்தில் பதிவான வீடியோக்களை ஒப்படைக்க போலீசார் சம்மன் அனுப்பியிருப்பதும் புதிய விவாதங்களை கிளப்பியுள்ளது.

சாட்டை துரைமுருகன் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “அந்த 8K கேமரா வீடியோக்கள் வந்துவிட்டால் கரூரில் நடந்த உண்மை வெளிப்படும். இதை தவெக தரப்பு பாதுகாப்பு காரணம் காட்டி மறுப்பார்கள். ஆனால் வசமாக சிக்கியிருக்கிறார்கள்” என்று விஜயை விமர்சித்துள்ளார். தவெக தரப்பும் இந்த விவகாரத்தில் தங்கள் நிலைப்பாட்டை வலியுறுத்தி வருகின்றது.
இதற்கிடையில், தமிழக அரசு வீடியோ ஆதாரங்களை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளது. ஊடகத்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் கூறியதாவது, காவல்துறையினர் தடியடி நடத்தவில்லை. கூட்ட நெரிசலில் சிக்கியவர்களுக்கு முதலுதவி அளித்து பாதுகாப்பு செய்ததாகவும், ஆம்புலன்ஸ் அழைப்புகள் மற்றும் வீடியோ காட்சிகள் இதற்கு சாட்சி எனவும் அவர் தெரிவித்துள்ளார். விஜய் பேசும் நேரத்தில் மின்சாரம் நிறுத்தப்படவில்லை என்ற ஆதாரங்களையும் அரசு வெளியிட்டுள்ளது.
இவ்விளக்கங்களின் பின்னணியில், கரூர் சம்பவம் இன்னும் அரசியல் சர்ச்சையை கிளப்பி வருகிறது. தவெக தரப்பினர் சதி நடந்ததாக குற்றம் சாட்ட, அரசு உண்மையை வெளிக்காட்டுவதாக வலியுறுத்துகிறது. இந்த விவகாரம் அடுத்தடுத்த கட்ட விசாரணைகளில் எவ்வாறு மாறுகிறது என்பது தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது.