கரூரில் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் 41 பேரின் உயிரை பலிகொண்டது. இதில் 39 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. தற்போது 111 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிகழ்வைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு, சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்ப வேண்டாம், அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.

ஸ்டாலின், “கரூர் நெரிசல் குறித்து பொய்யான செய்திகளையும், அரசியல் குற்றச்சாட்டுகளையும் பரப்ப வேண்டாம். எந்த அரசியல் தலைவரும் அப்பாவி மக்கள் உயிரிழப்பதை விரும்பமாட்டார்கள். நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அறிக்கை அளித்த பிறகு, எதிர்காலத்தில் நிகழ்ச்சிகளுக்கான புதிய விதிகள் உருவாக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், சமூக வலைத்தளங்களில் சிலர் அரசுக்கு எதிராக வதந்திகளை பரப்பி, புதிய நரேட்டிவ் உருவாக்க முயற்சிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குறிப்பாக இன்ஃப்ளூயன்சர்கள், சினிமா விமர்சகர்கள், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் கரூர் சம்பவத்துக்கு திமுக அரசே காரணம் என குற்றம்சாட்டும் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
இதனால், தமிழக அரசு இவ்வாறான பொய்யான பிரச்சாரங்களை பரப்புவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்டாலின் வெளியிட்ட எச்சரிக்கை, சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகளை தடுக்க அரசின் தீவிர நடவடிக்கை ஆரம்பமாகும் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.