சென்னை: விவசாயிகளின் உற்பத்தித்திறனை மேம்படுத்த கோத்தாரி 35 புதிய பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள், பூஞ்சைக் கொல்லிகள் மற்றும் உயிர் உரங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. விவசாயத் துறையில் பாரம்பரிய நிறுவனமான கோத்தாரி தொழில்துறை நிறுவனம், விவசாயத்திற்குத் தேவையான உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் ஊட்டச்சத்து மருந்துகளை உற்பத்தி செய்து வருகிறது. இந்த சூழலில், விவசாயிகளின் உற்பத்தித்திறனை மேம்படுத்த 35 புதிய பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள், பூஞ்சைக் கொல்லிகள், உயிர் உரங்கள் மற்றும் திரவ உரங்களை இப்போது தயாரித்துள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கோத்தாரி நிறுவனத்தில் நேற்று தொடக்க விழா நடைபெற்றது. இதில், கோத்தாரி நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் ஜே. ரஃபிக் அகமது, நிர்வாக துணைத் தலைவர் கார்த்திகேயன் மற்றும் ஆலோசகர் ஜெயந்த் முரளி ஆகியோர் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தினர். மேலும், விவசாயிகள் பயிர்களில் பூச்சிக்கொல்லிகளை தெளிப்பதற்காக ட்ரோன்கள் மூலம் பதிவு செய்வதற்கான சிறப்பு செயலி (டெக் கோத்தாரி) மற்றும் உதவி மைய வசதி (9095290953) ஆகியவற்றை அவர்கள் அறிமுகப்படுத்தினர்.

பின்னர், ரஃபீக் அகமது செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோத்தாரி நிறுவனத்திற்கும் விவசாயிகளுக்கும் நீண்டகால உறவு உள்ளது. தற்போது, விவசாயிகளின் நலனுக்காக 35 புதிய மருந்துகள், உயிர் உரங்கள் மற்றும் திரவ மருந்துகளை அறிமுகப்படுத்தியுள்ளோம். முக்கிய அம்சம், ட்ரோன்கள் மூலம் பயிர்களில் மருந்துகளை தெளிப்பதற்கான சிறப்பு செயலி மற்றும் உதவி மையத்தின் மூலம் பதிவு வசதி. பொதுவாக, ஒரு ஏக்கர் நிலத்தில் பயிர்களில் பூச்சிக்கொல்லிகளை தெளிக்க அரை நாள் ஆகும். ஆனால், ட்ரோன்கள் மூலம், ஒரு ஏக்கருக்கு ரூ. 500-க்கு 10 நிமிடங்களில் பூச்சிக்கொல்லிகளை தெளிக்கலாம்.
விவசாயிகள் எங்களுக்குத் தெரிவித்தால், ட்ரோன் உபகரணங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் ஜெனரேட்டர் பொருத்தப்பட்ட வாகனம் உடனடியாக வரும். எங்கள் ட்ரோன் உற்பத்தி மற்றும் பைலட் பயிற்சி நிறுவனம் மதுரையில் இயங்குகிறது. இதன் மூலம், தேவையான ட்ரோன் பைலட்டுகள் உருவாக்கப்பட்டு இந்தப் பணிக்காக ஈடுபடுத்தப்படுவார்கள். குறைந்த செலவில் பயிர்களில் பூச்சிக்கொல்லிகளை தெளிக்கும் எங்களின் இந்த புதிய முயற்சி, விவசாயத் துறையில் ஒரு திருப்புமுனையாக இருக்கும். எதிர்காலத்தில், விவசாய நிலங்களில் பூச்சிக்கொல்லிகளை தெளிக்க ட்ரோன்களை மட்டுமே பயன்படுத்தக்கூடிய சூழல் உருவாக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.