கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று காலை முதல் கனமழை பெய்தது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என பெற்றோர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கல்வித்துறை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கவில்லை. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் நனைந்தபடி இன்று பள்ளிக்கு சென்றனர்.
இந்நிலையில் இன்று மதியம் 2:07 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். கனமழை பெய்து வருவதால் பள்ளிகள் அரை நாள் மட்டுமே செயல்படும் என அறிவித்தார்.
அனைத்து பள்ளிகளும் மதியம் 3:30 மணிக்கு மூடப்படும் நிலையில், மதியம் 2:00 மணிக்கு கலெக்டர் விடுமுறை அறிவித்தது பெற்றோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனால் பல மாணவர்கள் மழையில் நனைந்தபடியே வீடுகளுக்குச் சென்றனர்.
நேற்று பெய்த மழையால் ஏராளமான மாணவர்கள் பாதிக்கப்பட்டதால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாவட்ட ஆட்சியரின் இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கண் கெட்ட பிறகு ஏன் சூர்ய நமஸ்காரம் என்று பெற்றோர் முணுமுணுத்தனர்.